உலகின் சுவாரஸ்யமான விளையாட்டாக எந்தளவு கிரிக்கெட் இருக்கிறதோ, அதே அளவிற்கு விதிகளை கடுமையாக கடைபிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு விதிகளும் மிக கடுமையாகவும், துல்லியமாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு பல போட்டிகளும் உதாரணமாக அமைந்துள்ளது.

அரிதிலும் அரிதான நோ பால்:


அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ஒன்றில் மிக அரிதான நோ பால் அம்பயரால் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிகளின்படி ஸ்டம்பிங் முறையிலும் பேட்ஸ்மேனை அவுட் செய்யலாம். இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதி போட்டியில் சோமர்செட் அணியும், நார்தம்ப்டன்ஷையர் அணிகளும் நேருக்கு நேர் மோதின.


இதில் சோமர்செட் அணியின் பேட்ஸ்மேன் லிவிஸ் க்ரெகோரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவருக்கு நார்தம்படன் அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் சைஃப் ஜயீப் பந்துவீசினார். அப்போது அவரது பந்தை இறங்கி அடிக்க முயற்சித்து லிவிஸ் கிரெகோரி தவறவிட்டார். இதையடுத்து, அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் லிவிஸ் மெக்மனஸ் வேகமாக ஸ்டம்பிங் செய்தார்.






ஏன் நாட் அவுட்?

கிரிக்கெட் விதிப்படி பந்துவீச்சாளரிடம் இருந்து வரும் பந்தை விக்கெட் கீப்பர் ஸ்டம்பிற்கு பின்னால் வந்தபின்பே பிடிக்க வேண்டும். அதேபோல, ஸ்டம்பிங் செய்ய வரும்போதும்( பந்து கைக்கு வரும் முன்) விக்கெட்கீப்பரின் க்ளவுஸ் ( கையுறை) நுனியளவு கூட ஸ்டம்ப்பை தாண்டி வரக்கூடாது. ஆனால், விக்கெட் கீப்பர் லிவிஸ் மேக்மெனஸ் பந்தை பிடிப்பதற்கு முன்பு அவரது கிளவுஸ் ஸ்டம்பை தாண்டி வந்தது.


இதனால், அந்த அவுட் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டதுடன் நோ பாலாகவும் அம்பயர்களால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பந்துவீச்சாளர் வீசிய ப்ரீ ஹிட்டை பேட்ஸ்மேன் கிரேகோரி சிக்ஸருக்கு பறக்க விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த போட்டியில் முதலில் ஆடிய சோமர்செட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்தது. டாம்பான்டன் 75 ரன்களை எடுத்தார். கோலர்-காட்மோர் 63 ரன்களை விளாசினார். தொடர்ந்து 216 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நார்தம்ப்டன் கேப்டன் டேவிட் வில்லி 57 ரன்களும், சைஃயீப் ஜயீப் 32 ரன்களும், ஆஷ்டன் அகர் 28 ரன்களும் எடுத்தனர். ஆனாலும், அவர்களால் 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சோமர்செட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.