டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது. இன்று (ஜூன் 19) ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட்டில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.


194 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா:


டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினார்கள்.


இதில் 11 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரீசா ஹென்ட்ரிக்ஸ் 11 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். பின்னர் அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் களத்திற்கு வந்தர். குயின்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் குயின்டன் டி காக்.


40 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு மொத்தம் 74 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் டக் அவுட் ஆகி வெளியேற இதனிடையே மார்க்ரமும் 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். 



பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.


அமெரிக்க அணி 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் களம் இறங்கினார்கள். இருவரும் அருமையான தொடக்கத்தை தங்கள் அணிக்கு அமைத்துக் கொடுத்தனர்.


அமெரிக்கா தோல்வி:


அந்தவகையில் 14 பந்துகள் களத்தில் நின்ற ஸ்டீவன் டெய்லர் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய நிதீஷ் குமார் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோனஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.


மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் ஆண்ட்ரிஸ் கௌஸ். ஆரோன் ஜோனஸ் விக்கெட்டை தொடர்ந்து களம் இறங்கிய கோரி ஆண்டர்சன் 12 ரன்களில் நடையைக்கட்ட அடுத்து வந்த ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுதார். இதனிடையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய  ஆண்ட்ரிஸ் கௌஸ் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார்.


மறுபுறம் அவருடன் ஜோடி அமைத்து ஹர்மீத் சிங் விளையாடினார். ஆனாலும் அமெரிக்க அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.