நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்து, இன்று முதல் சூப்பர் 8 சுற்றுகள் தொடங்குகிறது.


டி20 உலகக்கோப்பை:


இந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றிலே பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்தது. கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து வெளியேறியது. அதிலும், குறிப்பாக பாகிஸ்தான் அணி அமெரிக்காவுடன் தோற்றதுதான் இந்த தொடரிலே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த போட்டியாக அமைந்தது.


இந்திய அணி குரூப் போட்டியில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனாலும், குரூப் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் ஆகியோரின் பவுலிங்காலே இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்று கூறலாம்.


இன்னும் எடுபடாத இந்திய பேட்டிங்:


இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித், விராட் கோலி ஆகிய இருவரும் குரூப் சுற்றில் பெரியளவில் அசத்தவில்லை. அதிரடி வீரர்களாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒன்றும் ஐ.பி.எல். தொடரில் காட்டும் அளவிற்கு பெரியளவில் அதிரடியில் ஜொலிக்கவில்லை. அதற்கு மைதானமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.


இந்த சூழலில், இனி வரும் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அமெரிக்க மண் இந்திய வீரர்கள் மட்டுமின்றி எந்த அணி வீரர்களும் ஆடிப்பழக்கம் இல்லாத மைதானம். இதனால், இந்திய அணி மட்டுமின்றி மற்ற அணி வீரர்களும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. இந்த சூழலில், இனி வரும் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் பேட்டிங்கில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் ரோகித், விராட் கோலிக்கு இருப்பதால் அவர்கள் இனி வரும் போட்டிகளில் தங்களது வழக்கமான அதிரடிக்கு திரும்புவார்கள் என்று நம்பலாம். அதேபோல, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட் ஆகியோரும் அதிரடியில் கலக்குவார்கள் என்று நம்பலாம்.


வெஸ்ட் இண்டீசில் அசத்துவார்களா?


பந்துவீச்சைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசி வரும் சூழலில், சுழற்பந்து வீச்சாளர்கள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இதுவரை பேட்டிங், பவுலிங்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.


குரூப் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சூப்பர் 8 சுற்றிலும் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இனி இந்திய பேட்டிங் சிறப்பாக செயல்படுமா? என்பது நாளை ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் தெரிய வந்துவிடும்.


மேலும் படிக்க: T20 World Cup 2024: சூப்பர் 8ல் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் அமெரிக்கா..வெள்ளை மாளிகை வெளியிட்ட முக்கிய வீடியோ!


மேலும் படிக்க: IND vs ZIM T20I Series: ரோஹித், ஹர்திக் இல்லை.. ஜிம்பாப்வே எதிரான தொடருக்கு கேப்டனாக ருதுராஜ்..? வெளியான தகவல்!