USA Vs IRE, T20 Wolrdcup: ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற முதல் முயற்சியிலேயே, அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் நேற்று அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


மழையால் கைவிடப்பட்ட போட்டி:


புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் பகுதியில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற இருந்தது. ஆனால், விடாது மழை பெய்து கொண்டே இருந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியையாவது நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், டாஸ் கூட போட முடியாமல் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டி கைவிடப்பட்டது. அதோடு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.






அமெரிக்கா இன் - பாகிஸ்தான் அவுட்:


இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அமெரிக்க அணி, 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என 5 புள்ளிகளுடன் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலுமே 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். இதனால், அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறுகிறது. முன்னதாக, ஏ பிரிவில் உள்ள இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதாவது, ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் முயற்சியிலேயே, அமெரிக்கா அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


இதனிடையே இன்று 4 லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதில் இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதும் போட்டி புளோரிடாவில் தொடங்க உள்ளது.