அமெரிக்கா - இங்கிலாந்து:


கடந்த ஜூன் 2 ஆம் தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கேன்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


அதன்படி பேட்டிங்கை தொடங்கியது அமெரிக்க அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் களம் இறங்கினார்கள். இதில் ஆண்ட்ரிஸ் கௌஸ் 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை தொடர்ந்து நிதீஸ்குமார் களம் இறங்கினார்.


அதிரடியான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது டெய்லர் விக்கெட்டானார். மொத்தம் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 12 ரன்கள் எடுத்தார்.பின்னர் வந்த அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 2 பவுண்டரிகள் மட்டும் விளாசி 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 24 பந்துகள் களத்தில் நின்ற நிதீஷ் குமார் 1 பவுண்டரி மற்றும் 2 சிக் ஸர் உட்பட மொத்தம் 30 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.


இங்கிலாந்து அபார வெற்றி:


பின்னர் வந்த ஹர்மீட் சிங் மட்டும் 21 ரன்களை எடுக்க அடுத்து களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் கிரீஸ் ஜோர்டர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.இவ்வாறாக 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அமெரிக்க அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.


ஜோஸ் பட்லர் அதிரடி:






இங்கிலாந்து அணி 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியா ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 9.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி வரை களத்தில் நின்ற பிலில் சால்ட் 21 பந்துகளில் 25 ரன்களும் ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 6 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் என 83 ரன்கள் எடுத்தார். அந்தவகையில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.