டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு இன்னும் சரியாக 9 நாட்களே உள்ளது. எனவே, இந்த மிகப்பெரிய போட்டியில் பங்கேற்கும் 20 நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 


இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள அமெரிக்க அணி எப்படி விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணி, வங்கதேசத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதன்மூலம், வங்கதேசத்துக்கு எதிராக அமெரிக்க அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 






அசத்திய அமெரிக்கா: 


டி20 உலகக் கோப்பை 2024 போட்டியை இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதற்கு தயாராகும் வகையில் வங்கதேச அணி ஏற்கனவே அமெரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டி நேற்று ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அணி வங்கதேசத்தை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அமெரிக்க அணிக்காக மும்பையை சேர்ந்த ஹர்மீத் சிங் தனது அதிரடி இன்னிங்ஸிற்காக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அமெரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது. 


போட்டி சுருக்கம்: 


ஹூஸ்டனில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தௌஹீத் ஹ்ரிடோய் 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்து மெதுவான இன்னிங்ஸ் ஆடி இருந்தார். மறுபுறம் மஹ்முதுல்லா 22 பந்துகளில் 31 ரன்களும், சௌமியா சர்க்கார் 20 ரன்களையும், லிட்டன் தாஸ் 14 ரன்களும் எடுத்தனர். 


அமெரிக்கா சார்பில் ஆல்-ரவுண்டர் ஸ்டீவன் டெய்லர் 2 விக்கெட் எடுத்திருந்தார்.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஓரளவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. கேப்டன் மோனாங்க் 12 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக, இதன்பின், ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரீஸ் கவுஸ் (23) ஆகியோர் 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றனர். இருப்பினும், மிடில் ஓவர்களில் அமெரிக்க அணி விரைவாக விக்கெட்டுகளை இழக்க, 5 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தடுமாறியது. அப்போதுதான், நியூசிலாந்துக்காக விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் சிங் மற்றும் கோரி ஆண்டர்சன் ஜோடி 62 ரன்கள் சேர்த்து அமெரிக்காவை வெற்றிபெறச் செய்தனர். கோரி ஆண்டர்சன் 25 பந்துகளில் 34 ரன்களுடனும், ஹர்மீத் 13 பந்துகளில் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.


இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடர்: 


இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்கா - வங்கதேசம் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி இதுவாகும். வரும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த தொடர் வங்கதேசம் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். வங்கதேசம் தனது கடைசி டி20 தொடரில் ஜிம்பாப்வேயை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.


மறுபுறம், கனடா அணிக்கு எதிரான கடைசி டி20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் அமெரிக்க அணி வென்றுள்ளது. இந்த தொடரில் அமெரிக்க அணியின் முக்கிய வீரர்களாக கோரி ஆண்டர்சன், ஆண்ட்ரூஸ் கவுஸ், மாங்க் பட்டேல், சவுரவ் நெத்ராவால்கர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.