ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது. அதைதொடர்ந்து மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் இல்லாத இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. அதேநேரம், தவான் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரில் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சே என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.


வங்கதேசத்தில் சுற்றுப்பயணம்:


இதைதொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசம் சென்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின்  முதல் போட்டி நாளை மிர்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், வலைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த பிறகு ஒருநாள் தொடரில் ஷமி பங்கேற்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் குறைவே என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், முகமது ஷமியும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.  






இந்திய அணி விவரம்:   


ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , உம்ரான் மாலிக், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


 


இதனிடையே, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின், வங்கதேச அணிக்கான புதிய  கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.