உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. முன்னதாக, தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் - உல் -ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய பயிற்சியாளர்கள், தலைமைத் தேர்வாளர்:
அதன்பிறகு, பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலும், பாகிஸ்தான் கேப்டனாக இருந்த பாபர் அசாமும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, ஷான் மசூத் டெஸ்டில் கேப்டனாகவும், ஷாஹீன் ஷா அப்ரியொ டி20க்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் மற்றும் புதிய தலைமை தேர்வாளராக வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோரிடம் பிசிபி ஒப்படைத்துள்ளது. அதன்படி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக குல்லும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. டிசம்பர் 14-ம் தேதி தொடங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து அஜ்மல் மற்றும் குல் பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எச்பி எல் பிஎஸ்எல் சீசனில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும். 2022 ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
உமர் குல்:
2003 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு 2016 வரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்களும், 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 179 விக்கெட்டுகளும், 60 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய உமர் குல்"பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் பிசிபி நிர்வாகக் குழுவின் தலைவர் ஜகா அஷ்ரஃப், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பங்களிக்கும் வாய்ப்பை வழங்கியதை பெருமையாக கருதுகிறேன். இதற்கு முன்பு ஆண்கள் அணியில் பணியாற்றிய அனுபவம் உள்ளதால், பாகிஸ்தானின் பந்துவீச்சு திறமையை புதிய உயரத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன் எனது பயிற்சி நிபுணத்துவத்தை கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
சயீத் அஜ்மல்:
சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட சயீத் அஜ்மல், 2008 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். இதுவரை 35 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று வடிவங்களிலும் 447 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சயீத் அஜ்மல் "பிசிபி நிர்வாகக் குழுவின் தலைவர் ஜகா அஷ்ரஃப்க்கு நன்றி. பாகிஸ்தான் அணிக்காக சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன், நன்றியுள்ளவனாக இருப்பேன். பாகிஸ்தான் தேசிய அணியில் சுழற்பந்து வீச்சு திறமையை மேம்படுத்துவதில் பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது பயிற்சி அனுபவம் அணியின் சுழற்பந்து வீச்சு ஆயுதங்களை மேம்படுத்த உதவும்" என்று கூறினார்.