19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிக் கொண்டது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வில்லோவ்மூரி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் குவித்தது. 


தென்னாப்பிரிக்கா அணியின் இன்னிங்ஸை பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 23 ரன்களாக இருந்தபோது, ஸ்டீவ் ஸ்டோல்க் தனது விக்கெட்டினை 14 ரன்களில் இந்திய அணியின் ராஜ் லிம்பானி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த டேவிட் ரீகர் ராஜ் லிம்பானி பந்தில் போல்ட் ஆனார். 46 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின்னர் வந்த ரிச்சர்ட் தொடக்க ஆட்டக்காரர் பிரிட்டோரியஸ் உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது மட்டும் இல்லாமல் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 


இருவரும் அரைசதம் கடந்த நிலையில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில் பிரிட்டோரியஸ் 102 பந்துகளில் 6 பவுண்டரி  3 சிக்ஸர் விளாசி 76 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை முஷீர் கான் பந்து வீச்சில் முருகன் அபிஷேகிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஓலிவர் 22 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் டிவான் மரிஸ் தனது விக்கெட்டினை 3 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் ஜுவான் ஜேம்ஸ் 24 ரன்கள் எடுத்திருந்தார். 


அதன் பின்னர் கைகோர்த்த ரிய்லி நோர்டன் மற்றும் டிரிஸ்டன் லூஸ் இறுதிவரை களத்தில் இருந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷிர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 


தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் பெட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் 64 ரன்களும் சேர்த்திருந்தனர். 


அதன் பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.