India Vs England Test Series: இந்தியா உடனான டெஸ்ட் தொடர் முடியும் முன்பே, இங்கிலாந்து அணி அபுதாபிக்கு சென்றுள்ளது.


அபுதாபி பறக்கும் இங்கிலாந்து அணி:


விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அபுதாபிக்கு செல்ல அந்த அணி முடிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் நடந்த தொடரின் முதல் போட்டியை போலவே, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்கு நாட்களில் முடிவடைந்தது. இந்திய அணி தனது அபார திறனை வெளிப்படுத்தி வென்றதன் மூலம், தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்நிலையில்,  ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒன்பது நாட்கள் உள்ளன. இதனை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


விளையாட்டும், பயிற்சியும்..!


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அபுதாபியில் கோல்ஃப் விளையாட்டு மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து,  பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டில் நடைபெற உள்ள, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு சில தினங்களுக்கு முன்பாக இந்தியா திரும்ப உள்ளனர்.  கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையிலான அணி நிர்வாகம், இங்கிலாந்து வீரர்கள் 2012ம் ஆண்டு அலஸ்டர் குக் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றதை போன்றே, மீண்டும் இந்திய மண்ணில் தொடரை கைப்பற்ற இந்த பயணம் புத்துணர்ச்சி அளிக்கும் என நம்புகிறது.


இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, பயிற்சி ஆட்டங்களுக்காக முன்கூட்டியே இங்கு வருவதற்குப் பதிலாக அபுதாபி சென்ற இங்கிலாந்து அணி அங்கு விரிவான பயிற்சிகளை மேற்கொண்டது. இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதற்கான வழிகளில் இங்கிலாந்து அணி அதிக நேரம் செலவிட்டது. இதன் விளைவாக முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், இரண்டாவது போட்டியில் 399 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கோலி, ஜடேஜா, ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லமாலே, ரோஹித் தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது.


டெஸ்ட் தொடர் விவரங்கள்:


முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.