ICC Player of the Month: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு, இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐசிசி விருதுகள்:
கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விருது வழங்கி வருகிறது. இதற்காக மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் வாக்குகளின் அடிப்படையில் முதலிடம் பிடிப்பவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்திய தொடக்க விரர் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான டேவிட் மாலனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சுப்மன் கில்:
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சுப்மன் கில், செப்டம்பர் மாதத்தில் 80 சராசரியுடன் மொத்தம் 480 ரன்களை குவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அரைசதங்கள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொஹாலியில் நடந்த தொடரின் முதல் போட்டியில் 74 ரன்களை எடுத்ததோடு, இந்தூரில்நடைபெற்ற போட்டியில் 104 ரன்களை எடுத்தார். அவரது அபார ஃபார்ம் இந்தியா ஆசியக்கோப்ப மற்றும் ஆஸ்திரேலியா உடனான தொடரை வெல்ல உதவியது.
முகமது சிராஜ்:
வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் செப்டம்பர் மாதத்தில் இந்திய அணி, ஆசியக் கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும், இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். மொத்தத்தில், சிராஜ் 17.27 சராசரியில் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
டேவிட் மாலன்:
நியூசிலாந்து உடனான தொடரில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் மாலன், தொடர் நாயகன் விருதை வென்றார். அந்தத் தொடரின் போது மாலன் மூன்று போட்டிகளில் விளையாடி 54, 96 மற்றும் 127 ரன்களைப் பதிவுசெய்தார்.தொடரின் போது ஒட்டுமொத்தமாக 105.72 ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றார். இதன் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட 3 வீரர்களும் செப்டம்பர் மாதத்திற்கான, ஐசிசியின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு விரைவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
மகளிர் பிரிவு:
இதனிடையே, சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்தும் இடம் பெற்றுள்ளனர்.