இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் டீம் இந்தியா முதல் போட்டியில் வென்றிருக்கலாம், ஆனால் இந்திய அணியின் பிரச்சனைகள் குறைவதற்கான அறிகுறியே இல்லை. இந்தியாவின் டாப் ஆர்டர் முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றன.
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாட சென்னை வந்த சுப்மன் கில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இப்படியான சூழ்நிலையில், சுப்மன் கில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில், ரத்த தட்டுக்கள் (ரெட் பிளேட்லெட்கள்) குறைந்ததால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை நடைபெறும் (நாளை) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கில் இல்லாத நிலையில், ரோஹித் ஷர்மாவுடன் இஷான் கிஷன் ஓப்பனிங் செய்யவுள்ளார்.
சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்த தகவலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. சுப்மன் கில் அணியுடன் டெல்லிக்கு செல்லவில்லை என்றும், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, நேற்று மாலை, சுப்மன் கில்லின் பிளேட்லெட்கள் குறைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கில் அணியில் நீடிப்பாரா..?
கடந்த வாரம் சுப்மன் கில்லுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் டெங்கு உறுதியானது. இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டியில் கில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் கில் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. டெங்கு போன்ற நோயிலிருந்து குணமடைய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், கில் அடுத்த வார தொடக்கத்தில் மட்டுமே பயிற்சிக்கு திரும்ப முடியும்.
இருப்பினும், கில்லுக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்காது. மேலும் அவர் உலகக் கோப்பையில் அணியில் ஒரு அங்கமாக இருப்பார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் கில். ஒருமுறை முழுமையாக உடல்தகுதி பெற்றால், உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய கேம் சேஞ்சராக கில் தன்னை நிரூபிக்க முடியும்.
அக்டோபர் 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கும், அக்டோபர் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கும் எதிரான ஆட்டங்களில் கில் விளையாடுவது கடினம். இந்த இரண்டு போட்டிகளிலும் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி வெற்றி பெற்றால், கில் மீண்டும் பிளேயிங்-11ல் இடம் பெறுவது கடினமாக இருக்கலாம்.