இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தன்னுடைய 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சிறப்பாக பந்துவீசி 10 விக்கெட்களையும் எடுத்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் கணக்கை அதிகாரப்பூர்வமாக மாற்றும்படி இந்திய வீரர் அஸ்வின் கேட்டிருந்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்துள்ள அஜாஸ் பட்டேலின் கணக்கு நிச்சயம் வெரிஃபைட் கணக்காக இருக்கவேண்டும்” என்ற கோரிக்கையை பதிவிட்டிருந்தார்.அவருடைய கோரிக்கையை ஏற்ற ட்விட்டர் நிறுவனம் உடனடியாக இன்று நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் கணக்கை அதிகாரப்பூர்வமாக மாற்றியது. அதாவது ப்ளூ டிக் உடன் அதை வெரிஃபைடு கணக்காக மாற்றியது. இதன்பின்னர் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார்.
முன்னதாக இன்றைய போட்டிக்கு பிறகு அஜாஸ் பட்டேலை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியை தற்போது பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அஜாஸ் பட்டேலிடம் அஸ்வின் சில கேள்விகளை முன்வைக்கிறார். அதற்கு அவரும் பதிலளிக்கிறார். அந்த வீடியோவில் அஜாஸ் பட்டேல், “மீண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் வந்து விளையாடுவது மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லாம் கடவுளின் ஆசியாக தான் நான் நினைக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் இந்த போட்டியை எப்போதும் மறக்க மாட்டார்கள்.
மும்பையில் இருந்து ஒரு நடுத்தர குடும்பமாக நியூசிலாந்து குடிபெயர்ந்தேன். அங்கு முதலில் வேகப்பந்து வீச்சாளராக வர முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு போதிய உயரம் இல்லாததால் சுழற்பந்துவீச்சாளராக மாறினேன். தற்போது அது கை கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அஸ்வின், “ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளே, அஜாஸ் பட்டேல் இந்தப் பட்டியலில் எப்படி இனிய வேண்டும். ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுப்பது எப்படி? ஏதாவது சீக்ரேட் இருக்கா?” என்று கேள்வியை கேட்டார்.
அதற்கு அவர், “அப்படி ஒன்றும் இல்லை. அனுபவத்தில் என்னைவிட நீங்கள் தான் சிறப்பானவர். என்னைப் பொருத்தவரை எப்போதும் பந்தை சரியான போட வேண்டும் என்றே நினைப்பேன். அதிலும் குறிப்பாக இந்தியாவை போன்ற சிறப்பான அணியுடன் விளையாடும் போது பந்தை சரியான இடத்தில் வீசவில்லை என்றால் ரன்கள் எளிதாக வரும் என்று எனக்கு தெரியும். ஆகவே முடிந்தவரை சரியான இடத்தில் பந்துவீசுவதையே குறிக்கோளாக வைத்திருந்தேன்” எனக் கூறினார்.
இந்தப் பேட்டியின் இறுதியில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கையெழுத்து இட்ட ஜெர்ஸியை அஸ்வின் அஜாஸ் பட்டேலுக்கு வழங்கினார். ஏற்கெனவே அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் எடுத்த போது முதல் வீரராக அஸ்வின் பெவிலியனிலிருந்து கைதட்டினார். அதன்பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அஜாஸ் பட்டேலை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தற்போது இந்திய அணி மீண்டும் அஜாஸ் பட்டேலை கௌரவித்துள்ளது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வார்னே, இம்ரான் கான்.. பின்னுக்குத்தள்ளிய அஸ்வின் : 10 ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றி நாயகன்!