இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தன்னுடைய 14-வது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தினார்.
ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்திருந்தார். மொத்தமாக அவர் இந்த தொடரில் 14 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இதன்காரணமாக இந்தத் தொடரின் நாயகன் விருதை அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஷேன் வார்னே, ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் போன்ற பலரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள்:
வீரர்கள் | டெஸ்ட் போட்டிகள் | டெஸ்ட் தொடர்கள் | தொடர் நாயகன் விருதுகள் |
முத்தையா முரளிதரன்(இலங்கை) | 133 | 61 | 11 |
ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா) | 81 | 33 | 9 |
ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா) | 166 | 61 | 9 |
இம்ரான் கான்(பாகிஸ்தான்) | 88 | 28 | 8 |
ரிச்சர்ட் ஹாட்லி(நியூசிலாந்து) | 86 | 33 | 8 |
ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா) | 145 | 46 | 8 |
வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்) | 104 | 43 | 7 |
இவ்வாறு முத்தையா முரளிதரனுக்கு பிறகு டெஸ்ட் தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராக அஸ்வின் வலம் வருகிறார். இவர் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் உடன் இணைந்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். காலிஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இனிவரும் தொடர்களில் ஒரு முறை தொடர் நாயகன் விருதை வென்றால் அஸ்வின் காலிஸையும் முந்தி தனியாக இரண்டாம் இடத்தில் இருப்பார். மேலும் அவர் முத்தையா முரளிதரனையும் தாண்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சொந்த மண்ணில் 300 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். அஸ்வினிற்கு முன்பாக அனில் கும்ப்ளே இந்தியாவில் 300 விக்கெட்டிற்கு மேல் எடுத்துள்ளார்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
முத்தைய முரளிதரன்-493
ஆண்டர்சென்-402
அனில் கும்ப்ளே-350
வார்னே- 319
பிராட்-314
ரவிச்சந்திரன் அஸ்வின்-300*
மேலும் சொந்த மண்ணில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சொந்த மண்ணில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 300 விக்கெட்கள் கைப்பற்றியவர் பட்டியல் :
48 முத்தையா முரளிதரன்
49 ரவிச்சந்திரன் அஸ்வின்
52 அனில் கும்ப்ளே
65 வார்னே
71 ஆண்டர்சென்
76 பிராட்
இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சிறப்பான சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறார். கிரிக்கெட் உலகில் ஒற்றை தமிழனாக 10 ஆண்டுகளுக்கு மேலாக அஸ்வின் கொடிக்கட்டி பறந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:வெற்றிக்கொடிகட்டு.. படையெடு படையப்பா- சர்வதேச கிரிக்கெட்டின் படையப்பா விராட்டின் புதிய சாதனை !