இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இந்த சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில்  இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தியிருந்தார். 


அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் இந்த சாதனையை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். 


அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்படுகின்றது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். இவர் தற்போது தனது தாயின் அருகில் இருந்து அவருக்கு மேற்கொள்ளும் சிகிச்சைகள் குறித்தும், அவரை குணமடையச் செய்ய பார்த்துக்கொண்டு வருகின்றார் என கூறப்படுகின்றது. 






இப்படியான நிலையில், அஸ்வினுக்கு  துணை நிற்கும் விதமாக பிசிசிஐ துணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “ அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துகள். ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ள அஸ்வின் தனது தயாருடன் இருந்து அவரது தாயாரின் உடல் நலனிக் அக்கறை செலுத்த வேண்டும் என நினைக்கின்றோம்” எனக் கூறியது மட்டும் இல்லாமல் பிசிசிஐ பக்கத்தை டேக் செய்துள்ளார். இதன் மூலம் பிசிசிஐ அஸ்வினுக்கு பக்கபலமாக இருக்கும் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளதாக இணைய வாசிகள் பலர் தெரிவித்து வருகின்றனர். 


அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பது ராஜீவ் சுக்லாவின் எக்ஸ் பக்க பதிவின் மூலம் தெளிவாகின்றது. இதனால் பலரும் அஸ்வினின் தாயார் விரைவில் குணமடைவார் என அஸ்வினுக்கு சமூக வலைதளம் மூலமாக ஊக்கம் அளித்து வருகின்றனர்.