இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் போராடி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு நிற பட்டை அணிந்து  விளையாடி வருகின்றனர். 


இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள சௌராஸ்ட்ரா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 95. இந்தியாவில் மிக அதிக வயது நிரம்பிய முன்னாள் கிரிக்கெட் வீரராக தத்தாஜிராவ் கெய்க்வாட் அறியப்பட்ட நிலையில் இவர் காலமானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர் இந்திய அணிக்காக 9 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 




மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட்-க்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாவது நாளான இன்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி தங்களது கரங்களில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடினர். குறிப்பாக இந்திய அணி வீரர்கள் போட்டியின் மூன்றாவது நாளில் பந்து வீசும்போது இந்த கருப்பு அட்டையை அணிந்திருந்தனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”முன்னாள் இந்திய கேப்டனும், சமீபத்தில் காலமான இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்” என தெரிவித்துள்ளது. 


தத்தாஜிராவ் கெய்க்வாடும் இந்திய கிரிக்கெட்டும்


1952ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளாயாடியது.  அதாவது இந்தியா ஆங்கிலேயர்களிடத்தில் இருந்து சுதந்திரம் பெற்று 5 ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவே தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது முதல்  சர்வதேச டெஸ்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில்  தனது கடைசி சர்வதேச டெஸ்ட்டில் விளையாடினார். தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.




கடந்த 1959 ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க காலத்தில் இருந்த காலகட்டம் அது. அந்த தொடரினை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியிருந்தது.