அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மினி ஏலம், கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர சொகுசு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளிலும் சேர்த்து 87 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்த்து ரூபாய் 183.15 கோடியை கையிருப்பாக கொண்டு இந்த ஏலத்தை தொடங்கின. ஆரம்பம் முதலே அனைத்து அணிகளும், ஆல்ரவுண்டர்களை குறிவைத்தே ஏலத்தில் ஈடுபட்டன. அந்த வகையில் பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், முதல் 5 இடங்களையும் ஆல்-ரவுண்டர்களே பிடித்துள்ளனர்.
01. ரூ.18.5 கோடிக்கு ஏலம்போன சாம் கரன்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரனின் பெயர் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை, சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மல்லுக்கட்டின. ரூ.2 கோடி எனும் அடிப்படை தொகையிலிருந்து, மளமளவென ஏலத்தொகை உயர்ந்தது. ஒரு கட்டத்தில் போட்டியிலிருந்து மும்பை விலக, சென்னை மற்றும் பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ரூ.18.5 கோடிக்கு சாம் கரனை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றுள்ளார். முன்னதாக, 2021ல் கிறிஸ் மோரிஷ் ராஜஸ்தான் அணியால், ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்தொகையாக இருந்தது. முன்னதாக சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த சாம் கரன், பஞ்சாப் அணி மூலமாகவே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
02. ரூ. 17.5 கோடிக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்:
அடிப்படை தொகையாக ரூ.2 கோடி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான, கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.17.5 கோடி தொகைக்கு மும்பை அணியால் கேமரூன் கிரீன் ஒப்பந்தம் செய்யமாட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை கேமரூன் க்ரீன் பெற்றுள்ளார். முன்னதாக, அண்மையில் இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, வேகப்பந்து வீச்சாளராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் கேமரூன் கிரீன் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
03. ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன ஸ்டோக்ஸ்:
ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுக்க பெங்களூர், ராஜஸ்தான், லக்னோ மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் வரிந்து கட்டின. மாறி மாறி ஏலத்தொகையை அணி நிறுவனங்கள் உயர்த்தின. இறுதியில் சென்னை அணி, ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஸ்டோக்ஸை ஏலத்தில் வென்றது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸ் அண்மையில், இங்கிலாந்து அணி டி-20 உலகக்கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
04. ஆச்சரியம் அளித்த நிகோலஸ் பூரான்:
யாரும் எதிர்பாராத விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரானை லக்னோ அணி ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீக்கெட் கீப்பர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவரை ஐதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
05. ரூ. 13.25 கோடிக்கு ஏலம்போன ஹாரி ப்ரூக்:
முதல் ஆல்-ரவுண்டராக ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி ப்ரூக் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளும் தீவிரம் காட்டின. இறுதியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தது. ஆல்-ரவுண்டரான இவர் அண்மையில் நடந்த பாகிஸ்தான் உடனான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதியது குறிப்பிடத்தக்கது.