1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15, அன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.


டேவ் கிரிகோரி தலைமையிலான ஆஸ்திரேலியா நான்கு நாட்களில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டி இது.  மிகவும் சுவாரஸ்யமான போட்டியில்,  தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு ஓய்வு நாள் இருந்தது.


இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சார்லஸ் பேனர்மேன், 165 ரன்களை எட்டியதால், சர்வதேச அளவில் முதல் சதம் அடித்த வீரராக ஆனார். அவர் 285 நிமிடங்கள் மைதானத்தில் நிலைத்து நின்று விளையாடிய பிறகு காயத்துடன் பெவிலியன் திரும்பினார். 


ஆஸ்திரேலிய அணி சேர்த்த மொத்த ரன்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் பேனர்மேன் அடித்தார், அந்த அணி இறுதியில் தங்கள் முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இங்கிலாந்தின் ஆல்ஃபிரட் ஷா சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, பில்லி மிட்விண்டர்  சர்வதேச அளவில் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு 49 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சினால்,  104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, இங்கிலாந்துக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவின் டாம் கெண்டல் மிகச் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இங்கிலாந்து அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன் விளைவாக, முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தொடரில் மற்றொரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 356 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 356 போட்டிகளில், ஆஸ்திரேலியா 150 போட்டிகளில் வென்றுள்ளது, அதே சமயம் இங்கிலாந்து 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 96 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 


அதேபோல் இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை, 155 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா 87 போட்டிகளிலும், இங்கிலாந்து 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 போட்டிகள் டையிலும் (கைவிடப்பட்டுள்ளது), 3 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளது. 


மேலும், இரு அணிகளுக்கு இடையில் இதுவரை 23 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், இங்கிலாந்து 11 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.