டிஎன்பிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி, நெல்லை அணி அபார வெற்றி பெற்றது.


டிஎன்பிஎல் தொடர்:


கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கிய நடப்பாண்டிற்கான டின்பிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 28 லீக் போட்டிகளின் முடிவில் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி, கோவை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


எலிமினேட்டர் - 1:


இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் எலிமினேட்டர் போட்டியில் தொடரின் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த நெல்லை மற்றும் மதுரை அணிகள் மோதின. மாலை 7.15 மணிக்கு சேலத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


கோவை பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய அஜிதேஷ் 50 ரன்களையும், ராஜகோபால் 76 ரன்களையும் குவித்தனர்.  4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி  அத்கபட்சமாக 78 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்களை விளாசினார். மதுரை அணி சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


விடாது மல்லுக்கட்டிய மதுரை:


இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணிக்கு நிஷாந்தை தவிர, மற்ற முன்கள வீரர்கள் நல்ல தொடக்கம் அமைத்தனர்.  லோகேஷ்வர் 40 ரன்கள், ஆதித்யா 73 ரன்கள், ஸ்வப்னில் சிங் 48 ரன்கள் விளாசினர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற்ற 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், மதுரை அணியால் 14 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், நெல்லை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது. அதோடு, லீக் சுற்றில் மதுரை அணியிடம் கண்ட தோல்விக்கு நெல்லை அணி பழி தீர்த்துக் கொண்டது.


 இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி:


இதையடுத்து நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில், திண்டுக்கல் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், திருநெல்வேலியில் நாளை மாலை 7.15 மணிக்கு இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி தொடங்க உள்ளது.  இதில் வெற்றி பெறும் அணி வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.