TNPL Watch Video: டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடரில், சென்னை அணி வீரர் அடித்த பந்து மைதானத்தை கடந்து விவசாய நிலத்தில் சென்று விழுந்தது.


டிஎன்பிஎல்: மதுரை Vs சென்னை


டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடர் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.   அந்த வகையில் நேற்று திண்டுக்கல் NPR கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மதுரை மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மதுர அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 55 ரன்களையும், ஜெகதீசன் கௌஷிக் 43 ரன்களையும் விளாசினார்.






மைதானத்தை விட்டே வெளியேறிய பந்து:


இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் நாராயன் ஜெகதிசன், கேப்டன் பாபா அபரஜித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரரான சந்தோஷ் குமார் துரைசாமி மற்றும் பிரதோஷ் ரஞ்ச்ன் பால் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பிரதோஷ் 37 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 52 ரன்களை விளாசினார். அதிலும் அவர் விளாசிய ஒரு பிரமாண்ட சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்று அருகில் இருந்த விவசாய நிலத்தில் விழுந்தது.


கெஞ்சிய ரசிகர்கள் - மறுத்த விவசாயி:


பந்து தனது நிலத்தில் விழுந்ததும், அங்கிருந்த விவசாயி அதனை எடுத்துக் கொண்டார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பந்தை தூக்கி போடுமாறு கேட்டனர். ஆனால், ”நான் ஏன் தர வேண்டும், எனது நிலத்தில் விழுந்து இருக்கிறது, இது எனக்கு தான் சொந்தம்” என்பது போல பேசிக்கொண்டே அங்கு நகர்ந்து சென்றார். தொடர்ந்து, பந்துடன் தனது வயலில் போட்டிருந்து கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியுள்ளார் அந்த விவசாயி. இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம், சார் சார் பால் கொடுங்க என கேப்ஷனை பதிவிட்டுள்ளது.