TNCA Cricket: ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். கடந்த 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கத்தின் "ஹோம் கிரவுண்ட்" என்பது சேப்பாக்கம் மைதானம் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். பல வரலாற்று மைல்கற்களைக் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது 90-வது ஆண்டில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில், TNCA-வும் ஒன்று என்றால் மிகையில்லை. 


சீனிவாசனும் TNCA-வும்:


கடந்த 20 ஆண்டுகளாக TNCA-வின் சக்தி வாய்ந்த மனிதர் யார் என்றால், கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் என சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு TNCA-வின் தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை  அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். அதன்பின், பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி தொடர்ந்தாலும், நேரடி பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்த TNCA தலைவர் யார் என்றால், அவரது சொந்தமகளான ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது.  


வெற்றி பெற்ற அமைச்சரின் இளைய மகன்:


இந்நிலையில், இன்று நடைபெற இருந்த தேர்தலில், TNCA-வில் உறுப்பினராக உள்ள 170-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்று இருந்தனர்.  ஆனால், காலையில் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் போதே, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு, தமது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் அசோக் சிகாமணி, போட்டியின்றி, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.  ஏற்கெனவே, போட்டியில்லாததால், ஆர். ஐ. பழனி, கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மேலும், TNCA- எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தின் துணைத் தலைவராக ஆடம் சேட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆர்.ஐ.பழனி சங்கத்தின் செயலாளராகவும், சிவகுமார், ஆர்.என்.பாபா துணைச் செயலாளர்களாகவும் மற்றும் சீனிவாசராஜ் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


”தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் உதவித்தொகை”


இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அசோக் சிகாமணி கூறியதாவது, ”ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்படும் எனவும் பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


Rain Update: அடுத்த 4 நாட்களுக்கு இப்படியா? நவ.9 உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகணும் மக்களே..