இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் ஆகியோரின் பிறந்தநாளை இந்திய அணி இன்று கொண்டாடியது . கோலி மற்றும் அப்டன் இருவரும் நவம்பர் 5 ம் தேதி பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 






இதற்கான வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கோலி மற்றும் பேடி அப்டன் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி, சக இந்திய அணி வீரர்கள் பகிர்ந்தளித்தனர். இந்தநிலையில் உலகம் முழுவதும் விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு கோலியின் ரசிகர்கள், அவருக்கு சமூக வலைத்தளங்கள் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 






விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 34 வயதாகும் கோலி, டி20 உலகக் கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் உட்பட நான்கு போட்டிகளில் 220 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்து, தற்போது முதலிடத்தில் உள்ளார். 


முன்னதாக, நேற்று ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வல், விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில்,”ஆமாம், எனவே நாளை, எனது நல்ல நண்பர்களில் ஒருவரான விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த நாள் என்று நம்புகிறேன். எப்படியும் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். மகிழுங்கள் நண்பரே” என தெரிவித்தார். 


விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் RCB அணிக்காக இரண்டு சீசன்களாக இணைந்து விளையாடி வருகின்றனர். ஐபிஎல் மெகா ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வல்- ஐ ஆர்சிபி அணி ரூ. 11 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. 


இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேயுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளது. 


இந்திய அணி:  கே.எல்.ராகுல், ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக்(வ), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் , யுஸ்வேந்திர சாஹல்