இந்திய கிரிக்கெட்டின் பழம்பெரும் சங்கங்களில் ஒன்றான தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, அமைச்சர் பொன்முடியின் மகன், அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று தேர்தல் நடைபெற இருந்த சூழலில், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது, எதிர்த்துப் போட்டியிட்ட பிரபு, தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், TNCA- எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
TNCA வரலாறு:
இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். கடந்த 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கத்தின் "ஹோம் கிரவுண்ட்" என்பது சேப்பாக்கம் மைதானம் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். பல வரலாற்று மைல்கற்களைக் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது 90-வது ஆண்டில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில், TNCA-வும் ஒன்று என்றால் மிகையில்லை.
சர்ச்சைக்குரிய தேர்தல் :
பணமும் பெருமையும் மிக்க TNCA-வின் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணியும், அவரை எதிர்த்து பிரபுவும் போட்டியிட்டனர். இதில் அசோக் சிகாமணி, முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் அறியப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி அசோக் சிகாமணி உள்ளிட்ட சிலர் போட்டியிடுவதால், இத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால், இது சர்ச்சைக்குரிய தேர்தலாக மாறியது. இந் நிலையில், தமது வேட்புமனுவை பிரபு வாபஸ் பெற்றதால், போட்டியின்றி தலைவராகத் தேர்வானார் டாக்டர் அசோக் சிகாமணி.
சீனிவாசனும் TNCA-வும்:
கடந்த 20 ஆண்டுகளாக TNCA-வின் சக்தி வாய்ந்த மனிதர் யார் என்றால், கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் என சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு TNCA-வின் தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். அதன்பின், பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி தொடர்ந்தாலும், நேரடி பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்த TNCA தலைவர் யார் என்றால், அவரது சொந்தமகளான ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்த சீனிவாசனின் ஆதரவுடன் தான், அமைச்சர் பொன்முடியின் மகனும் கிரிக்கெட் நிர்வாகியுமான அசோச் சிகாமணி, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தற்போது போட்டியின்றி தேர்வும் ஆகியுள்ளார்.
வெற்றி பெற்ற அமைச்சரின் இளைய மகன்:
இன்று நடைபெற இருந்த தேர்தலில், TNCA-வில் உறுப்பினராக உள்ள 170-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்று இருந்தனர். ஆனால், காலையில் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் போதே, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு, தமது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் அசோக் சிகாமணி, போட்டியின்றி, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். உதவி செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் தங்களது வேட்புமனுவை, எந்தவொரு நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அனைவரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். துணைத் தலைவராக ஆடம் சேட், செயலாளராக ஆர்.ஐ. பழனி, இணை செயலாளராக கே. சிவக்குமார், உதவி செயலாளராக ஆர்.என். பாபா மற்றும் பொருளாளராக டி.ஜே. சீனிவாசராஜூம் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்குகள் வாபஸ்:
ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் போது, போட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை எந்தவித நிபுந்தனையுமின்றி வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது உறுதியாகிவிட்டது. இதனால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டநிர்வாகிகள் அனைவரும் உடனடியாக பதவியேற்று, களத்தில் இறங்கினர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக் சிகாமணி தலைமையிலான புதிய அணி, சாதனைகள் படைத்து, தமிழக கிரிக்கெட்டிற்கு மென்மேலும் சிறப்புகளைச் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்,