நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிம் சவுதி ஓய்வு:

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளார் டிம் சவுதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நியூசிலாந்து அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்து அது நிறைவேறவும் செய்தது. நியூசிலாந்து அணிக்காக 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியது எனக்கு பெருமையாக உள்ளது. ஆனால் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த இந்த கிரிக்கெட்டில் இருந்து  விடைபெறுவதற்கு இது தான் சரியான நேரம் என்று தெரிவித்திருந்தார். 

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு எனது இதயத்தில் என்றுமே தனி இடமே உள்ளது. எனது டெஸ்ட் பயணம் எந்த அணிக்கு எதிராக தொடங்கியதோ அதே அணிக்கு எதிராக எனது பயணம் முடிவடையப் போகிறது. இதை விட எனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பான இடத்தில் முடிக்க முடியாது.

சவுதியின் பயணம்: 

முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் போட்டியில் 17 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி தனது முத்திரையை முதன் முதலாக பதித்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தலைமை தாங்கினார்.நியூலாந்து அணிக்காக 4 ஒருநாள் உலகக்கோப்பை, எழு டி20 உலகக்கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். 

இது மட்டுமில்லாமல் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பும் சவுதியிடம் உள்ளது. 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  385 விக்கெட்டுகள் இதுவரை எடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் டெஸ்டில் 300 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில்  200 விக்கெட்டும், டி20 களில் 100 விக்கெட்டுகளும் எடுத்த ஓரே பெளலர்கள் என்கிற சாதனைக்கு ஓரே சொந்தக்காரர் டிம் சவுதி தான். 

மீண்டும் வர வாய்ப்பா?

ஆனால் தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் அதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷ்ப்பின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதிப்பெற்றால் நிச்சயம் ஓய்வில் இருந்து திரும்புவது குறித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.