ICC Halla Of Fame: இந்தியாவை சேர்ந்த விரேந்திர ஷேவாக் மற்றும் டையானா எடுல்ஜி ஆகியோர் உட்பட 3 பேருக்கு, புதியதாக ஐசிசியின் ”ஹால் ஆஃப் பேம்” அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


ஐசிசியின் ”ஹால் ஆஃப் பேம்” :


சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதோடு, தங்களது காலத்தில் விளையாட்டில் கோலோச்சிய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ”ஹால் ஆஃப் பேம்” அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பெயர்கள், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த கவுரவத்திற்காக பரிந்துரைக்கப்படும். அந்த வகையில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து புதியதாக 3 பேருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.






”ஹால் ஆஃப் பேம்”-ல் இணைந்த 3 நட்சத்திரங்கள்: 


ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புகழ்பெற்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரரான விரேந்திர சேவாக், இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீராங்கனையான டயானா எடுல்ஜி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாரான அரவிந்த டி சில்வா ஆகியோருக்கு ”ஹால் ஆஃப் பேம்” அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில் தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் வரிசையில், தற்போது சேவாக் மற்றும் எடுல்ஜி ஆகியோருக்கும் இந்த கவுரவம் கிடைத்துள்ளது.


விரேந்திர சேவாக்:


அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன சேவாக் டெஸ்ட். ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2000வது ஆண்டுகளில் தொடக்க காலத்தில் இருந்து இரட்டை சதம் விளாசியது வரை,  இந்திய அணிக்காக அவர் விளையாடிய பல இன்னிங்ஸ்களை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8586 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில், 23 சதங்கள் மட்டுமின்றி தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 319 ரன்கள் என்ற முச்சதமும் அடங்கும். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல, 380 ரன்கள் குவித்த சேவாக் முக்கிய பங்கு வகித்தார்.


டயானா எடுல்ஜி


எடுல்ஜி தனது கேரியரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்,  மூன்று வெவ்வேறு தசாப்தங்களாக இந்தியாவுக்காக 54 போட்டிகளில் விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான எடுல்ஜி, 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். ஐசிசியின் ஹால் ஆஃப் பேமில் இடம்பிடித்த இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை எடுல்ஜி பெற்றுள்ளார். 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் சேர்த்ததோடு,  63 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதேபோன்று,  34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் சேர்த்து, 46 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.


அரவிந்த டி சில்வா:


1996ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசி இலங்கை அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர் அரவிந்த டி சில்வா. 18 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 20 டெஸ்ட் சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 11 சதங்களையும் விளாசியுள்ளார்.  93 டெஸ்ட் போட்டிகளில் 6,361 ரன்களை குவித்ததோடு 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,284 ரன்கள் விளாசியதோடு 106 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.