உலகக் கோப்பை 2023ல் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு தகுதிபெற்ற 8 அணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த போட்டிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் வெளியேறியுள்ளன.


முன்னதாக, உலகக் கோப்பை 2023 புள்ளிகள் அட்டவணையின் அடிப்படையில் 2025 சாம்பியன் டிராபிக்கு தகுதிபெறும் அணிகள் முடிவு செய்யப்படும் என்று ஐசிசி அறிவித்தது. போட்டியை நடத்தும் பாகிஸ்தானை, உலகக் கோப்பை புள்ளிகள் அட்டவணையில் டாப் 7 அணிகள் சாம்பியன் டிராபிக்கு தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளது. 


2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்ற அணிகளின் பட்டியல்


சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் வருமாறு:



  1. இந்தியா

  2. தென்னாப்பிரிக்கா

  3. ஆஸ்திரேலியா

  4. நியூசிலாந்து

  5. ஆப்கானிஸ்தான்

  6. இங்கிலாந்து

  7. பாகிஸ்தான்

  8. வங்கதேசம்


இலங்கை மற்றும் நெதர்லாந்து அணி விளையாட ஏன் தகுதியில்லை..? 


1996 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியின் செயல்திறன் இந்த உலகக் கோப்பை மிகவும் மோசமாக இருந்தது. உலகக் கோப்பைக்கு முன்னதாகவும், தொடங்கப்பட்டதில் இருந்தே அந்த அணி வீரர்களின் காயங்களால் தடுமாறி வந்தது. இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் வெறும் 2ல் மட்டும் இலங்கை அணி வெற்றிபெற்றது. அதுவும், நெதர்லாந்து எதிராக ஒரு வெற்றியும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியும் பதிவு செய்திருந்தது. இது தவிர, மற்ற 7 போட்டிகளிலும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 


உலகக் கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் இந்த அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற்ற வங்கதேச அணியும் தனது கணக்கில் 4 புள்ளிகளை மட்டுமே வைத்திருந்தாலும், அந்த அணியின் நிகர  ரன் ரேட் இலங்கையை விட சிறப்பாக இருந்தது. 


அதேபோல், உலகக் கோப்பை 2023 நெதர்லாந்து எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த அணி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்ததன் மூலம் அதிர்ச்சியை அளித்தது. அதே நேரத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து நிகர ரன் ரேட் காரணமாக தகுதிச் சுற்றில் தவறவிட்டது. 


வங்கதேசத்தின் நிகர ரன் ரேட் -1.087 ஆகவும், இலங்கை மற்றும் நெதர்லாந்து முறையே -1.419 மற்றும் -1.825 ஆகவும் இருந்தது.


உலகக் கோப்பை 2023 அரையிறுதியில் எந்தெந்த அணிகள்..?


உலகக்கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் டாப் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தகுதிபெற்றுள்ளன. 


முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நவம்பர் 15ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் 16ம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. 


உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.