உலகக் கோப்பை 2023ல் வெற்றித் தேரில் ஏறிச் செல்லும் இந்திய அணி, லீக் கட்டத்தில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 


நெதர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 410 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 250 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் இந்திய தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது. அவை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.. 



  1. 2003 உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு பிறகு, 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 9 வெற்றிகளை பதிவு செய்து தனது சொந்த சாதனையையே இந்தியா முறியடித்துள்ளது.

  2. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 2023 உலகக் கோப்பையை இந்தியா வென்றால், ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்யலாம்.

  3. 2023ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 24வது வெற்றி இதுவாகும். இதன் மூலம், இந்திய அணி ஒரு வருடத்தில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை சமன் செய்துள்ளது.

  4. 1998ல் கூட இந்திய அணி இந்த வடிவத்தில் 24 போட்டிகளில் வெற்றிபெற்றது. அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தினால் இந்த சாதனையை முறியடிக்க முடியும்.

  5. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை அடித்த என்ற பெருமையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த ஆண்டில் இந்திய அணி மொத்தமாக 215 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முன், 2019ல் 209 சிக்ஸர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் பெயரில் இந்த சாதனை இருந்தது.

  6. நெதர்லாந்துக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரு உலகக் கோப்பை பதிவில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.  இந்த உலகக் கோப்பையில் இவர் இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

  7. முன்னதாக, அனில் கும்ப்ளே கடந்த 1996 உலகக் கோப்பையில் 15 விக்கெட்களையும், 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 15 விக்கெட்களையும் எடுத்திருந்தே அதிகபட்சமாக இருந்தது.

  8. உலகக் கோப்பை சதம் அடித்து தற்போதைய பயிற்சியாளர் ராகில் டிராவிட்டை சமன் செய்தார் கே.எல்.ராகுல். உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக சதம் அடித்த இரண்டு இந்திய விக்கெட் கீப்பர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ராகுல் டிராவிட்.

  9. நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா மொத்தம் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தவிர அனைத்து வீரர்களும் பந்துவீசினர். இதன் மூலம், 31 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் ஒரு அணியின் 9 வீரர்கள் பந்து வீசிய சம்பவம் நடந்துள்ளது.

  10. இதற்கு முன் 1992ல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்தும், 1987ல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தும் இதை செய்துள்ளன.

  11. நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், கபில்தேவுக்கு பிறகு, உலகக் கோப்பை போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்து, ஒரு விக்கெட்டை எடுத்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.