இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது.


இந்த போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், திருவனந்தபுரத்திற்கு வந்ததும் அவர்களுக்கு கேரளாவின் பாரம்பரிய முறைப்படி கதகளி நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊர் திரும்பியதன் காரணமாக,  தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் திருவனந்தபுரம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இரு அணிகளும் தீவிரம்:


தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதலடைய முனைப்பு காட்டி வருகிறது.


இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள சூழலில், போதிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இலங்கை அணி திணறி வருகிறது. இதனால், கடைசி போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.


நேருக்கு - நேர்


இதுவரை இரு அணிகளும் 164 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இந்திய அணி 95 போட்டிகளிலும், இலங்கை அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. அதோடு, கடந்த போட்டியில் தோற்றதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்வியை கண்ட அணியின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தகக்து.


இந்தியா அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்


இலங்கை அணி விவரம்:


நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ராஜித


விராட் கோலி படைக்க இருக்கும் புதிய சாதனை: 


விராட் கோலி இலங்கைக்கு எதிராக இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2337 ரன்கள்  எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக அதிக ரன்களை குவித்ததில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர் விராட் கோலியை விட முன்னிலையில் உள்ளனர். தற்போது டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பில்லை என்றாலும், தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. 


தோனி இலங்கைக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் 2383 ரன்கள் எடுத்துள்ளார். இந்தநிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்தால், இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக 84 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 3113 ரன்கள் எடுத்துள்ளார்.