இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. 


இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள், திருவனந்தபுரத்திற்கு சென்றனர். அப்போது, ரோகித் அண்ட் படைக்கு கேரளாவின் பாரம்பரிய முறைப்படி கதக்களி நடனமாடி வரவேற்றனர். 






இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படும் அணியில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஹெட் டூ ஹெட் :



  • போட்டிகள்: 164

  • இந்தியா: 95

  • இலங்கை :57

  • டை : 1


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:


இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்


இலங்கை:
நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ராஜித


விராட் கோலி படைக்க இருக்கும் புதிய சாதனை: 


விராட் கோலி இலங்கைக்கு எதிராக இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2337 ரன்கள்  எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக அதிக ரன்களை குவித்ததில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர் விராட் கோலியை விட முன்னிலையில் உள்ளனர். தற்போது டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பில்லை என்றாலும், தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. 


தோனி இலங்கைக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் 2383 ரன்கள் எடுத்துள்ளார். இந்தநிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்தால், இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார்.


சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக 84 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 3113 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைக்கு  சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது சாத்தியமற்றது. 


இலங்கை அணி பேட்டிங்:


கடந்த வியாழன்கிழமை நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியில், அவிஷ்கா மற்றும் நுவனிடு ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசி எதிர்தரப்பினரை மிரட்டினர். இதனால், அவிஷ்கா  20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய  நுவனிடு 50 ரன்களை சேர்த்து அசத்தினர். தொடர்ந்து அவர் ரன் - அவுட் முறையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். 


பந்துவீச்சில் மிரட்டல்:


தொடர்ந்து வந்த குசால் மெண்டீஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் சேர்க்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தசுன் ஷனகா வெறும் 2 ரன்களின் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் துனித் ஓரளவிற்கு நிலைத்து நின்று 32 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்ச்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இந்திய அணி தடுமாற்றம்:


இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோகித், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து, விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், ஒருகட்டத்தில் 86 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 


இந்திய அணி வெற்றி:


இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராகுல் - பாண்ட்யா ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்தபோது, 36 ரன்கள் எடுத்திருந்த பாண்ட்யா அவுட்டானர்.  அவரை அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 21 ரன்களை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ராகுல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து,  43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 216 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 62 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.