வெற்றியை ஆனந்தக் கண்ணீர் மூலம் கொண்டாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸமின் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மிகுந்த எதிர்பார்ப்பையும், அரசியல் வட்டத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது நேற்றை கிரிக்கெட் போட்டி. பல்வேறு உணர்வுகளால் எதிர்பார்ப்பு எகிறி இருந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.






அப்போது மைதானத்தில் கேலரியில் இருந்த அவரது தந்தை ஆஸம் சித்திக்கி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அவரை சுற்றியிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.


27 வயதான பாபர், நேற்றைய ஆட்டத்தில் 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவருடன் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆடினார் அவர் 79 ரன்கள் எடுத்தார். இருவரும் இனைந்து 152 ரன்களைக் குவித்தனர். மகனின் அபார ஆட்டத்தைக் கண்ட தந்தை கண்ணீர் சிந்துவது இயல்புதானே. ஆனாலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டுக் கிடைத்த வெற்றி என்பதால் அந்தக் கண்ணீரில் தேசப்பற்றும் வழிந்தோடியது. அந்த வீடியோவை பாகிஸ்தான் நாட்டவர் பலரும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.



12 போட்டிகளில் தோல்வி..


கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில்  பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கிறது.  


இதனால் தான் நேற்றைய ஆட்டம், பாகிஸ்தான் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியை வென்று தோல்வியின் ரணத்தை பாகிஸ்தான் சரிசெய்து கொண்டது. ரணம் தீர்ந்த மனதின் அழுகையாக, ஒட்டுமொத்த பாகிஸ்தானின் உணர்வை பாபர் ஆஸமின் தந்தை ஆஸம் சித்திக்கி வெளிப்படுத்திவிட்டதாக அந்நாட்டவர் நெகிழ்ந்து உருகுகின்றனர்.


பாபர் அசாமின் ஆட்டம்..


சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 40 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் தாண்டினார். மறுமுனையில் முகமது ரிஸ்வானும் 41 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். கடைசி 3 ஓவர்களில் 17 ரன்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால், ஷமி வீசிய 18வது ஓவரின் முதல் பந்திலே ரிஸ்வான் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தையும் ரிஸ்வான் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், பாகிஸ்தான் வெற்றிக்கு 15 பந்தில் 3 ரன்களே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி முகமது ஷமியின் ஓவரிலே வெற்றி பெற்றது. இதன்மூலம் உலககோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றதே இல்லை என்ற கரும்புள்ளிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 52 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 55 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.