டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் பயணம் சூப்பர் 12 சுற்றோடு நிறைவு பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரியும் விலகினர். இந்நிலையில், நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடர் குறித்து, இந்திய அணி உடனான பயணத்தை குறித்து ரவி சாஸ்திரி தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. 


2021 டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில், விமர்சனங்கள் எழாமல் இல்லை. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பர்ஃபாமென்ஸை பார்ப்பதற்கு முன்பே அணியின் தேர்வு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துகளை முன்வைத்திருந்தனர். ஷிகர் தவான், சாஹல் உள்ளிட்டோர் அணியின் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், அணி தேர்வு குறித்து கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி,  “அணி தேர்வு சம்பந்தமான முடிவுகளில் நான் தலையிடுவதில்லை. ஒரு போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் யார் என்பதை முடிவு செய்வதில் என்னுடைய பங்கு இருக்குமே தவிர, இந்த தொடரில் விளையாடப்போகும் 15 பேரை தேர்வு செய்வதில் நான் பங்காற்ற முடியாது. கேப்டனுக்கே அந்த உரிமை கிடையாது” என தெரிவித்தார். 



டி20 உலக கோப்பையை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை அடுத்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இந்திய டெஸ்ட் அணிக்கான முதல் போட்டியில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய கடந்த ஐந்து வருடங்களாக முதல் இடத்தில் இருந்தது. கோலி, மனரீதியாக சோர்வடைந்து கேப்டன் பொறுப்பு வேண்டாம் என தெரிவித்துவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வரை (இது உடனே நடந்துவிடாது, சில காலம் எடுக்கும்) எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரையும் இதேதான். டெஸ்ட் கேப்டன்சியில் கவனம் செலுத்த நினைத்தால், ஒரு நாள் கேப்டன்சி பொறுப்பில் இருந்து கோலி அவராகவே விலகுவார்” என தெரிவித்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண