கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து மாற்றப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டு பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதினர். 


முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான்  67 ரன்களும், பகர் ஜாமான் 55 ரன்களும் பெற்றிந்தனர். 




177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் ரன் எதுவுமின்றி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 49 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளிக்க, மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். 






ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டாய்னிஸ் மற்றும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஒன்றிணைந்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை தெறிக்கவிட்டனர். ஆஸ்திரேலியா அணிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19 வது ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்தை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தூக்க முயற்சித்தபோது, அந்த எளிய கேட்சினை ஹாசன் அலி தவறவிட்டார். வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மேத்யூ வேட் அடுத்ததடுத்து மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு ஆஸ்திரேலியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 






 


இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதற்கு ஹாசன் அலி தான் காரணம் என்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். தெய்வத்தோடு ஒப்பிட்டு ஹாசன் அலியை புகழ்ந்து தள்ளுக் கின்றனர். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் ஹாசன் அலி குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். 


டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முகமது ஷமி தான் காரணம் என்று கருத்து தெரிவித்தனர். அதேபோல், தற்போது ஹாசன் அலி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் வார்த்தை தாக்குதலுக்கு சிக்கி தவித்து வருகிறார்.