இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்குகிறது. இந்தியா விளையாடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்ப்பார்த்திருந்தனர். காலை எழுந்து பார்த்தால், முடிவு எட்டப்பட்டிருந்தது. வரலாறும் படைக்கப்பட்டிருந்தது!


ஆம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியான நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்தின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது வங்கதேச அணி! கடந்த 10 ஆண்டுகளில், நியூசிலாந்து மண்ணில் நியூசி அணியை வீழ்த்தி இருக்கும் முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது வங்கதேச அணி!


ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட்டர்கள் இல்லாமல், புது கேப்டன், இளம் வீரர்களோடு களமிறங்கிய வங்கதேச படை இந்த அசாதாரண வெற்றியை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, ‘வெற்றி கணிப்புகள்’ நியூசிலாந்துக்கு சாதகமாகவே இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து. 






ஆனால், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய வங்கதேச வீரர்கள், முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் எடுத்தனர். அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய நியூசிலாந்துக்கு செக் வைத்தது வங்கதேசம். எபடோத் ஹூசெயினின் 6 விக்கெட் வேட்டை நியூசிலாந்து அணி பேட்டர்களை கட்டிப்போட்டது. வங்கதேசத்தின் பந்துவீச்சுக்கு ஆதராவக இருந்தது சிறப்பான ஃபீல்டிங். இரண்டும் சிறப்பாக அமையவே, வெற்றி வங்கதேசத்தின் பக்கம் திரும்பியது.







சிறப்பாக பந்துவீசிய எபடோத், 21 ஓவர்களில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தஸ்கின் அகமது 14 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், 169 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது நியூசிலாந்து. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய வங்கதேச அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று வரலாறு படைத்திருக்கிறது.


வங்கதேசம் தட்டித்தூக்கிய ரெக்கார்டுகள்:



  • நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் வங்கதேசம் பதிவு செய்திருக்கும் முதல் வெற்றி (அனைத்து ஃபார்மெட்கள் உட்பட)

  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி

  • ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களில் இருக்கும் ஒரு அணிக்கு எதிராக, வெளிநாட்டில் வங்கதேச அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றி

  • 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் வங்கதேசம், இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

  • சொந்த மண்ணில் நியூசிலாந்து தொடர்ந்து வென்று வந்த 17 டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வங்கதேசம்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண