கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகள் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. 1877ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்பின்பு டெஸ்ட் கிரிக்கெட் முறை பல்வேறு நாடுகளுக்கு பரவியது. அப்போது முதல் 20ஆம் நூற்றாண்டி பிற்பாதி வரை கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட்தான். டெஸ்ட் கிரிக்கெட் பலரையும் கவர்ந்தாலும் பெரியளவில் வரவேற்பை பெற டெஸ்ட் கிரிக்கெட் சற்று தடுமாறியது. ஏனென்றால் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் அதில் விறுவிறுப்பு சற்று குறைவு என்று ரசிகர்கள் கருதினர். 


மாறிவரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப கிரிக்கெட்விளையாட்டிலும் பல்வேறு மாற்றங்கள் இருந்தன. அதன்படி 1971-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் என்ற தொடங்கப்பட்டது. ஜனவரி மாதம் 5-ஆம் தேதி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 40 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மேலும் அந்தப் போட்டியில் ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக  8ஓவர்கள் கொடுக்கப்பட்டது. 



இந்தப் போடியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் எட்ரிச் 119 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்  இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இயான் சேப்பல் 103 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். 






இந்தப் போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் பல மாற்றங்கள் வந்தது. இரு அணிகளுகும் 60 ஓவர்கள் என்று சென்று அதன்பின்னர் 50 ஓவர்களாக மாற்றப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டைவிட ஒருநாள் கிரிக்கெட் அதிகளவில் கவனத்தை ஈர்த்தது. 20ஆம் நூற்றாண்டில் ஒருநாள் கிரிக்கெட் என்றால் 21ஆம் நூற்றாண்டில் டி20 போட்டிகள் அறிமுகமாகி ஒருநாள் போட்டியைவிட அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்தது. இருப்பினும் இத்தனை புதிய வகை கிரிக்கெட் ரகங்கள் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக டெஸ்ட் கிரிக்கெட் தான் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் தலை தூக்க தொடங்கிய உடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் விறுவிறுப்பு வந்துள்ளது.