’THE MOST GIFTED PLAYER’  இது தான் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை காணும் பல வர்ணனையாளர்கள் சொல்லும் வார்த்தை.


ஆனால் காசில்லாமல் கடன் வாங்கி கிரிக்கெட் பயிர்ச்சிக்கு சென்ற ரோஹித் சர்மாவை உங்களுக்கு தெரியுமா? அசுரத்தனமாக சிக்ஸர்களை அடிக்கும் ரோஹித் ஒரு பேட்ஸ்மேன் இல்லை, அவர் ஒரு ஆப் ஸ்பின்னர் என்பது தெரியுமா? ஒரே ஒரு முறை ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பாருங்கள் என பிரவின் ஆம்ரேவிடம் ரோகித்தின் பயிர்ச்சியாளர் கெஞ்சியது தெரியுமா? 2011 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக, கதவை பூட்டிக்கொண்டு இந்த உலகக்கோப்பையின் ஒரு போட்டியை கூட நான் காண மாட்டேன் என வைராக்கியமாக இருந்த ரோஹித்தை தெரியுமா?


இது அனைத்தையும் தெரிந்துக்கொள்ள இந்த செய்தியை முழுமையாக படியுங்கள், நிச்சயம் இனி இவரை luck, gift என்ற வார்த்தைக்குள் அடக்க மாட்டீர்கள்.




ஏப்ரல் 30, 1987 மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் பிறந்தார் ரோகித் சர்மா. தந்தை குருநாத் ஷர்மா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கின் பராமரிப்பாளர். கிரிக்கெட் மீது காதல் கொண்டிருந்தார் ரோகித், ஆனால் காசு கொடுத்து கோச்சிங் அனுப்பும் அளவிற்கு குடும்ப சூழல் இல்லை. 


ஆனாலும் போரிவள்ளி கிரிக்கெட் காம்பின் பயிற்சிக்கு கடன் வாங்கி ரோகித்தை அனுப்பி வைத்தார் அவருடைய தந்தை.


அங்கு முதன்முதலாக ரோகித்தை கண்ட பயிற்சியாளர் தினேஷ் லாட், அவரின் ஆப் ஸ்பின்னை கண்டு வியந்தார். இவன் சூப்பராக வருவான் என பள்ளி நிர்வாகத்திடம் பேசி, பள்ளியில் சேரவும் பீஸ் இன்றி படிக்கவும் வைத்தார். தன்னுடைய ஆப் ஸ்பின்னால் போட்டிகளை வென்று கொண்டிருந்தார் ரோகித், அப்போது ஒரு நாள் கேம்புக்கு லேட்டாக வந்த பயிர்ச்சியாளர், ரோகித் சர்மா ஷாடோ பிராக்டிஸ் செய்து கொண்டிருந்ததை பார்த்தார், ஆஹா இவரை பேட்டிங்கில் பயண்படுத்த தவறிட்டோமே என்பதை உணர்ந்தார்.


வந்தது ஹாரிஸ் அண்ட் கைல்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் டொரணமெண்ட், கடைசி பேட்ஸ்மேனாக இறங்கி கொண்டிருந்த ரோகித்தை ஓப்பனிங் அனுப்பினார் லாட். அரங்கமே அதிர ஒரு செஞ்சுரியை பதிவு செய்தார் அவர், இது தான் ரோகித் வாழ்வின் முதல் டர்னிங் பாயிண்ட்.


அண்டர் 16 டிரையல்ஸில் செலெக்ட் ஆக முடியவில்லை, துவண்டு போனார் ரோஹித்.. ஆனால் அண்டர் 15, அண்டர் 17 என வயது வரம்பில் மாற்றத்தை கொண்டு வந்தது பிசிசிஐ. இதனால் அண்டர் 17 மும்பை செலெக்‌ஷன் டிரயலில் பிளேயர் ஆப் தி டொர்ணமெண்ட் அவார்டை வாங்கினார் ரோஹித்.


மும்பையின் ரைசிங் ஸ்டாராக மாற தொடங்கினார் ரோஹித், அவரின் திறமையை கண்டு வியந்த வாசு பரஞ்ஞப்பி, ஒரே ஒரு முறை ரோகித்தின் பேட்டிங்கை பாருங்கள் என ஜுனியர் அணியின் செலெக்டராக இருந்த பிரவீன் ஆம்ரேவிடம் கேட்டார்.




அங்கிருந்து எகிற தொடங்கியது ரோகித்தின் கிராஃப், 2006ல் அண்டர் 19 உலகக்கோப்பை, 2007ல் இந்திய அணியில் டெபியு என்று... ஐயர்லாந்து அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்ற ரோகித்திற்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான டி20  ஆட்டத்தில் அணியில் இடம்பெற்றார் ரோகித், ஆனால் யுவராஜ் சிங் 6 பாலுக்கு 6 சிக்ஸர் அடித்த அந்த போட்டியிலும் ரோகித் ஷர்மாவிற்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அப்போது தான் டி20 உலகக்கோப்பையின் மிக முக்கியமான போட்டி, யுவராஜிற்கு காயம்,  தென்னாபிரிக்க அணியை வீழ்த்தினால் தான் செமி பைனல் என்ற நிலை. இறங்கினார் ரோகித், கடுமையான சீமிங் கண்டிஷனில் பொல்லாக், மகாயா நிடினி, மார்கெல்லுக்கு எதிராக இன்னிங்க்ஸின் கடைசி பாலை சிக்ஸர் அடித்து தன்னுடைய முதல் ஹாப்ஃ செஞ்சுரியை பதிவு செய்தார். இந்தியாவும் டி20 உலககோப்பையை வென்றது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தியது இந்தியா, அந்த சிபி சீரிஸின் முதல் பைனலில் 87-3 என திணறிக்கொண்டிருந்த இந்திய அணியை சச்சினுடன் பார்டனர்ஷிப் போட்டு 66 ரன்களை விளாசி பினிஷின் லைனை தாண்ட வைத்தார் ரோகித்.


இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரோகித் தான் என்று கிரிக்கெட் உலகம் கொண்டாட தொடங்கிய அந்த காலகட்டத்தில் விராட் கோலி சீனிலேயே இல்லை.




ஆனால் சர்வதேச கிரிக்கெட் ஒன்றும் அவ்வளவு எளிதில்லையே, ஆரம்பித்தது சறுக்கல், தொடர்ந்து சொதப்பினார் ரோஹித்.. டக் அவுட், ஒற்றை இலக்க ரன்கள் என மிடில் ஆர்டரில் நம்பகம் இல்லா பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். அதிலும் உச்சகட்டமாக சோசியல் மீடியாக்களில் இவரை மேகி என்று அழைத்தார்கள். அதாவது டூ மினிட்ஸ் எப்படி மேகி ரெடி ஆகுமோ, அதேபோன்று இரண்டு நிமிடங்களில் அவுட் ஆகி வெளியே வந்து விடுவார் ரோகித் என்று கேலி செய்தார்கள். அவருடைய பர்பாமன்ஸும் அப்படி தான் இருந்தது. 2007ல் ஆடத் தொடங்கிய அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2010ல் தான் முதல் செஞ்சுரியை அடித்தார், முதல் ஆயிரம் ரன்களைக் தட்டு தடுமாறி கடக்க ரோஹித் சர்மாவுக்கு 43 இன்னிங்ஸ் தேவைப்பட்டது, ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் முதல் 150 இடங்களில் கூட ரோகித் சர்மாவின் பெயர் இல்லை.


தொடர் மோசமான ஆட்டத்தால் 2011 உலகக் கோப்பை அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தார். மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது, இதிலிருந்து எப்படி மீள போகிறேன் என்று தெரியவில்லை. எனக்கு மிகப் பெரிய பின்னடைவு... இவை தான் அன்று ரோகித் சொன்ன வார்த்தைகள்.


உன்னுடைய ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுரை சொன்னார் யுவராஜ் சிங். கடுமையாக உழைக்கத் தொடங்கினார் ரோஹித், ஆனாலும் அவரால் அதை ஸ்கோராக கன்வர்ட் செய்ய முடியவில்லை. 




2012 இலங்கை அணியுடனான சீரிஸ், 5,0,0,4,4 கேட்பதற்கு பின்கோடு போல இருக்கும் இந்த நம்பர்ஸ் தான் ரோகித்தின் ஸ்கோர். ஐந்து போட்டிகளில் 13 ரன்கள், இதுவரை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இவ்வளவு மோசமாக எந்த இந்தியன் பேட்ஸ்மேனும் விளையாடியது இல்லை, இவரை ஏன் இன்னும் அணியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பாத ரசிகர்களே இல்லை.


ஆனால் இந்த இடத்தில் தோனியையும் அணி நிர்வாகத்தையும் நாம் பாராட்ட வேண்டும், எத்தனை முறை சறுக்கினாலும் ரோகித்திற்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரருக்கும் இத்தனை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்காது என்று அடித்து சொல்லலாம்.


2013 இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர், முதல் மூன்று ஆட்டங்களில் ரோகித்துக்கு பிளேயிங் லெவனின் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே நேரம் ஓப்பனராக இறங்கிய ரஹானே முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பி இருந்தார். நான்காவது மேட்சில் ரோகித்துக்கு வாய்ப்பு கொடுத்த தோனி, அவரை ஓப்பனராக உள்ளே அனுப்பினார். இதுதான் ரோகித் வாழ்வில் இரண்டாவது டர்னிங் பாயிண்டு.


93 பந்துகளில் 83 ரன்கள் அடித்த ரோகித், தன்னுடைய 82 ஆவது இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்தார். கிட்டத்தட்ட முதல் 2000 ரன்கள் அடிக்க ரோகித் சர்மாவுக்கு ஆறு ஆண்டுகள் ஆனது. அங்கிருந்து பறக்க ஆரம்பித்தது பௌண்டரிகளும் சிக்ஸர்களும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் ஓப்பனிங்கில் ஆடினார் ரோகித். இந்தியாவும் சாம்பியன் ஆனது ரோகித்தும் சாம்பியன் ஆக உருவானார்.




அடுத்த 21 இன்னிங்ஸில் 3000, 23 இன்னிங்ஸில் 4000, 16 இன்னிங்ஸில் 5 ஆயிரம் என தான் விட்டது அனைத்தையும் ராக்கெட் வேகத்தில் பிடிக்கத் தொடங்கினார் ரோஹித். மேலும் இந்த காலகட்டத்தில், உலகிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான பேட்ஸ்மேன்கள் மட்டுமே செய்திருந்த டபுள் செஞ்சுரி என்ற சாதனையை, அசால்டாக மூன்று முறை செய்து, ODI வரலாற்றின் ஒரே போட்டியில் அதிகபட்ச 264 ரன்கள் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித். third Slowest batsman to reach 2000 என்ற நிலையிலிருந்து, second fastest batsman to reach 10000 என்ற நிலைக்கு உயர்ந்தார் ரோகித்.


இதே காலகட்டத்தில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது. அதனால் எப்போதெல்லாம் கோலி கேப்டன்சியில் சொதப்புகிறாரோ, அப்போதெல்லாம் ரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வந்தது. ஒரு கட்டத்தில் பிசிசிஐ கோலி இடையே விரிசல் ஏற்பட, கேப்டன் ஆனார் ரோகித்.




பேட்ஸ்மேனாக தன்னுடைய சரித்திரத்தை எழுதிவிட்ட ரோகித், தற்போது கேப்டன் அவதாரத்தில் தன்னுடைய வரலாற்றை செதுக்கி வருகிறார். உலகக்கோப்பையில் அதிரடி ஸ்டார்ட் கொடுத்து எதிரணிகளை திணரடித்துள்ள ரோகித், அசால்ட்டாக இந்த உலகக்கோப்பையில் இரண்டு, மூன்று சதங்களை விளாசி இருக்கலாம், ஆனால் பர்சனல் ரெக்கார்டை விட அணியின் வெற்றியே முக்கியம் என விளையாடி குயிக் ஸ்டார்ட் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார் ரோகித். அவரை ஃபாலோ செய்து ஒட்டுமொத்த அணியும் விளையாடுகிறது. கேப்டன் FANTASTIC.. கேப்டன் அக்ரசிவ்.. கேப்டன் கூல்.. என்று காலம் ஒவ்வொரு கேப்டனுக்கு ஒரு பெயரை வைக்கிறது.. ஆதில் நிச்சயம் SELFLESS கேப்டன் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டார் ரோகித் என்று சொன்னால் மிகையாகாது.