உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 19ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை காண ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் ஸ்டேடியத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத் செல்ல வேண்டுமானால், கொஞ்சம் அல்ல, அதிகமாகவே பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் போல. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் கட்டணம் வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19ம் தேதிகளில் பல ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு மட்டும் ஒரு அறையானது ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், வெல்கம் ஹோட்டல்கள், ITC ஹோட்டல்கள் வரிகளைத் தவிர்த்து சுமார் ரூ. 96,300 வசூலிப்பதாகவும், அதேபோல், கோர்ட்யார்ட் ஹோட்டல்கள், மேரியட் ஹோட்டல்கள் ஒரு இரவுக்கு சுமார் ரூ. 64,000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ப்ளூம்சூட்ஸ் ஒன்றுக்கு ரூ. 43,000 வரை வசூலித்து வருகின்றனர். இதுபோல, பல ஹோட்டல்கள் ஏற்கனவே இந்த தேதிகளில் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் அளவில் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. ஊடக அறிக்கையின்படி, அகமதாபாத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.24,000 ஆக இருந்தது. தற்போது, இறுதிப் போட்டி நெருங்கும் நேரத்தில், இங்குள்ள ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஆறு மடங்காக அதிகரித்த விமான டிக்கெட்கள்:
ஹோட்டல் விலையைத் தவிர, அகமதாபாத் விமான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத்திற்கு விமான டிக்கெட்டுக்கு பொதுவாக ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை இருந்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டியை முன்னிட்டு தற்போது கிட்டத்தட்ட ரூ.30,000 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்ல ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10,000-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறை விலைகள் பெருமளவில் உயர்ந்ததைத் தொடர்ந்து, (எக்ஸ்) ட்விட்டர் வாசிகள் சமூக ஊடக தளங்களில் விலை பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டனர். அதில், ”இந்த சனிக்கிழமை (11/18) ஐதராபாத்தில் இருந்து அகமதாபாத்திற்கு விமான டிக்கெட் விலைகள் - 30 ஆயிரம், பெங்களூரு - 25 ஆயிரம், டெல்லி - 15 ஆயிரம், சென்னை - 16 ஆயிரம். இதுவே இப்போதைக்கு குறைந்த டிக்கெட் விலை” என பதிவிட்டிருந்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.