உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இறுதிகட்டத்தினை எட்டிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியைக் காண நேரில் வரவுள்ளதால் ஏற்பாடுகளும் பாதுகாப்பு பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெறு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா மட்டும் இல்லாமல் கிரிக்கெட்டினை தீவிரமாக விளையாடக்கூடிய நாடுகளிலும் மக்கள் ஒரே இடத்தில் கூடி இறுதிப் போட்டியினை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக வந்து போட்டியைக் காண ரசிகர்கள் விமானம் வாயிலாக இந்தியாவினை நோக்கி படையெடுத்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் சர்வதேச ஊடகங்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள முன்னணி ஊடகங்கள் வரை இறுதிப்போட்டி குறித்த செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக பணிகளைச் செய்து வருகின்றனர். இறுதிப் போட்டிக்கு வீரர்கள் தாயாராகி வருவதைப் போல் ரசிகர்களும் ஊடகங்களும் தயாராகி வரும்போது, இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத் நகரத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நேரில் சென்று காண செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சிறப்பு ரயில்கள்
டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் காலை அகமதாபாத் சென்றடையும். டெல்லியில் இருந்து புறப்படும் ஒரு ரயில், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு மூன்று ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
அனைத்து வழக்கமான ரயில் முன்பதிவுகளும் நிரப்பப்பட்டுவிட்டதால், சிறப்பு ரயில்களில் இருக்கைகள் உயர்த்தப்பட்ட விமானக் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் கிடைப்பதை இந்திய ரயில்வே உறுதி செய்துள்ளது, மேலும் விமானக் கட்டணங்கள் ரூ. 20,000 முதல் ரூ. 40,000 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு ரயில் கட்டணங்கள்
பயணிகள் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டை ரூ.620க்கும், 3ஏசி எகானமி பெர்த் ரூ.1,525க்கும், 3ஏசி இருக்கை ரூ.1,665க்கும், முதல் வகுப்பு ஏசி ஸ்லீப்பர் ரூ.3,490க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
போட்டியின் முடிந்த பின்னர், அகமதாபாத்தில் இருந்து ரசிகர்கள் திரும்புவதற்கு ஏதுவாக சுமார் 2:30 மணிக்கு புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
எகிறிய விமான சேவைக் கட்டணங்கள்
இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குமா இயக்காதா என்பது குறித்து தெளிவான முன்னறிவிப்பு எதுவும் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் பலரும் விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தனர். இதனால், அகமதாபாத் விமான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத்திற்கு விமான டிக்கெட்டுக்கு இயல்பான நாட்களில் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் கருத்தில் கொண்டு விமான சேவை நிறுனங்கள் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. தற்போது முக்கிய நகரங்காளில் இருந்து அகமதாபாத் செல்ல விமான சேவைக் கட்டணம் கிட்டத்தட்ட ரூ.30,000 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்ல ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10,000-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அகமதாபாத் வரும் விமான பயணிகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டா மேளதாளத்துடன் பயணிகளை வரவேற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் தன் கையொப்பத்தை இட ஏதுவாது மிகப்பெரிய வெள்ளை போர்டு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.