பங்களாதேஷ் அணியுடனான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் வெறிகொண்டு விளையாடி பல சாதனைகளை தகர்த்தெரிந்துள்ளது. இஷான் கிஷனின் முதல் இரட்டை சதம் மற்றும் விராட் கோலியின் 44வது சதத்தின் மூலம் இந்திய அணி 409 ரன்களை  குவித்தது. இந்த போட்டியில் உடைக்கப்பட்ட சாதனைகளை பார்க்கலாம்.



இந்திய அணி உடைத்த சாதனைகள்



  • விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் இடையேயான 290 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தியாவுக்காக 331 ரன்கள் எடுத்த அதிகபட்ச ரன் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

  • 250 ரன்களுக்கு மேல் ஒரு நாள் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்ரேட் வைத்த ஜோடியானது இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி ஜோடி. இவர்கள் 2வது விக்கெட்டுக்கு 31.4 ஓவரில் 290 ரன்கள் சேர்த்ததுடன் 9.15 என்ற அருமையான ரன் ரேட்டை வைத்து விளையாடியுள்ளனர். 2006ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை ஜோடி சனத் ஜெயசூர்யா மற்றும் உபுல் தரங்காவின் உலக சாதனையான 8.98 ரன் ரேட்டில் 31.5 ஓவர்களில் 286 ரன்கள் சேர்த்த சாதனை முறியடிக்கப்பட்டது.

  • இஷான் கிஷான் மற்றும் கோஹ்லி ஆகியோர் எதிரணியின் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியுள்ளனர். 1998 இல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக கங்குலியும் டெண்டுல்கரும் 252 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பைப் பெற்றனர். நேற்று சட்டோகிராமில் வங்கதேசத்துக்கு எதிராக கிஷன் மற்றும் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்து அவர்கள் சாதனையை முறியடித்தனர்.

  • இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது - 409. ஒருநாள் போட்டிகளில் இந்தியா 400 ரன்களை கடப்பது இது 6வது முறையாகும், இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 418 ஆகும்.


தொடர்புடைய செய்திகள்: இந்த பட்டியலில் கோலியும் இல்லை..? தோனியும் இல்லை...? கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் இவர்தான்!


இஷான் கிஷன்



  • இஷான் கிஷன் இப்போது உலகின் ஏழாவது பேட்ஸ்மேன் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்தியர் ஆவார். கடந்த காலங்களில், சச்சின் டெண்டுல்கர் (200*), ரோஹித் சர்மா (264, 209 & 208*), வீரேந்திர சேவாக் (219), மார்டின் கப்தில் (237*), கிறிஸ் கெய்ல் (215), மற்றும் ஃபகர் ஜமான் (210), அந்தந்த அணிகளுக்காக இரட்டை சதம் அடித்துள்ளனர். 

  • உலக கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் (24 வயது) என்ற சாதனையை படைத்துள்ளார்.

  • அதிவேக இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர் (126 பந்துகளில் 200) என்ற பெருமையை பெற்று கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.

  • வங்கதேசத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை உடைத்துள்ளார். இதற்கு முன் ஷேன் வாட்சன்தான் முன்னிலையில் இருந்தார்.

  • வங்கதேசத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். (கங்குலியின் 7 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்தார்)



விராட் கோலி



  • அண்டை நாடுகளுக்கு எதிராக 15 போட்டிகளில் 807 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் பெற்றார். இதற்கு முன் ரோஹித் சர்மா 15 இன்னிங்ஸ்களில் 807 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தவிர, மூன்று வடிவங்களிலும் (T20I, ODI, & டெஸ்ட்) பங்களாதேஷுக்கு எதிராக மென் இன் ப்ளூ அணிக்காக அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

  • வங்கதேசத்துக்கு எதிரான மூன்று வடிவங்களிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு விராட் கோலி புதிய சொந்தக்காரர். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1,316 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தார். நேற்றைய போட்டியில் 91 பந்துகளில் 113 ரன்களுக்குப் பிறகு, விராட் கோலி இப்போது வங்கதேசத்திற்கு எதிராக 25 இன்னிங்ஸ்களில் 1,392 ரன்கள் எடுத்துள்ளார். 25 இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் சராசரி 73.26 ஆகும்.

  • விராட் கோலி தனது 44வது ஒருநாள் சதத்தை இன்று பதிவு செய்தார். சச்சின் டெண்டுல்கருக்கு (49) பின்னால் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  • ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 44 சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றையும் விராட் கோலி படைத்தார். சச்சின் தனது 418வது இன்னிங்ஸில்தான் தனது 44வது ஒருநாள் சதத்தை எடுத்தார், அதே நேரத்தில் கோஹ்லி தனது 256வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.