எனக்கு ஒரு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய கிரிக்கெட்டிடம் கேட்டு ட்வீட் செய்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசி ஆறே போட்டிகளில் கழற்றிவிடப்பட்ட கருண் நாயர். 


முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர்


நவம்பர் 2016 இல் மொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கருண் நாயர், சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அந்த தொடரின் கடைசிப் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தது மட்டுமின்றி, முச்சததையும் தொட்டு சாதனை படைத்தார். அந்த போட்டியில் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இந்த சாதனை மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில் மிக குறைந்த போட்டிகளிலேயே முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக நாயர் தேர்வு செய்யப்பட்டதுடன், அந்த போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியினர் வென்றனர். அவரிடம் அந்த அளவுக்கு திறனை கவனித்த இந்திய அணி தேர்வுக்குழு அவருக்கு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்தன. ஆனால் அதன் பிறகு எதிலுமே பெரிதாக சோபிக்கவில்லை. 



ஒன் மேட்ச் ஒண்டர்


ஒன் மேட்ச் ஒண்டராக முத்திரை குத்தப்பட்ட அவரை மெதுவாக அணியில் இருந்து கழற்றி விட்டது இந்திய அணி! மார்ச் 2017 இல் அவரது கடைசி டெஸ்ட் விளையாடினார். ஜூன் 2016 இல் கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார். ட்விட்டரில், அவர் தற்போது தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருமாறு கிரிக்கெட்டிடம் கெஞ்சியுள்ளார். "அன்புள்ள கிரிக்கெட், எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்", என்று அவர் எழுதினார்.


தொடர்புடைய செய்திகள்: இந்த பட்டியலில் கோலியும் இல்லை..? தோனியும் இல்லை...? கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் இவர்தான்!


கமெண்ட்ஸ்


ட்வீட்டிற்கு பதிலளித்த ஒரு ரசிகர், "கருண் பாய், உறுதியாக இருங்கள்.. உங்களை நம்புங்கள்.. நீங்கள் நிச்சயமாக மீண்டும் களத்தில் இருப்பீர்கள்!" என்றார். மற்றொரு ரசிகர், "வரவிருக்கும் ராஞ்சி தொடரில் நன்றாக விளையாட வாழ்த்துக்கள்!" என்றார். "உள்நாட்டில் நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். பிருத்வி போன்ற சிறுவனுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, தோழியை மறந்து விடுங்கள். இதை எதிர்மறையாகச் சொல்லாமல் மூன்று மடங்கு கடினமாக உழைக்கவும்", என்று மற்றொரு ரசிகர் அறிவுரை கூறினார்.






கருண் நாயர் ஸ்டேட்ஸ்


மற்றொரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார், "கிரிக்கட் வரலாற்றில் சராசரியாக 62+ வைத்திருக்கிறார், ட்ரிபிள் சதம் அடித்த 2வது இந்திய வீரர், ஆனால் அவர் 6 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி 27 வைத்திருக்கும் சிலர் இன்னமும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். ஏன் இந்த பாகுபாடு?" என்றார். 31 வயதான அவர் கடைசியாக மஹாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக பங்கேற்றார். 12 ஆட்டங்களில், நாயர் 23.36 சராசரி மற்றும் 146.02 ஸ்ட்ரைக்-ரேட்டில் 257 ரன்கள் எடுத்தார். மைசூரில் ஹூப்ளி டைகர்ஸ் அணிக்கு எதிராக 91* என்ற அதிக ஸ்கோருடன் அரை சதம் அடித்தார். 


உனத்கட் ட்வீட்


இவரை போலவே சில நாட்கள் முன்பு உனத்கட் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிகப்பு பந்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு டீவீட்டை வெளியிட்டிருந்தார். அதில் "எனக்கு மற்றுமொரு வாய்ப்பை கொடு, ரெட் பால்", என்று எழுதியிருந்தார். அதன் பிறகு தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி அவரது பெயர் காயமடைந்த ஷமிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளது. அது போல தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்பதற்காக இந்த டீவீட்டை கருண் பதிவிட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர் சிலர்.