இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி,  மூன்று இருபது ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி,  இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான  முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.


இந்திய அணி நிலவரம்:


காயத்தில் இருந்து முழுமையாக மீளாத ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த தொடரில் இடம்பெறாத நிலையில், கோலி, கே.எல். ராகுல் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. 


இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காராக இளம் அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் களமிறங்குவர். நடு வரிசையில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதால் அணி வலுவாக உள்ளது. பந்து வீச்சில் சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


பாண்ட்யா செய்தியாளர் சந்திப்பு:


போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, உலக கோப்பையை வெல்வது தான் இந்த புத்தாண்டில் நான் எடுத்திருக்கும் தீர்மானம். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்தார்.
 


இலங்கை அணி நிலவரம்:


ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் இந்த தொடரில் களமிறங்குகிறது. பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.


நேருக்கு நேர் மோதல்:


குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. அதனால் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், போட்டியின் முடிவில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17 போட்டிகளில் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.


இந்தியா உத்தேச அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.


இலங்கை உத்தேச அணி: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா. 
பிசிசிஐ திட்டம்:


2024-ம் ஆண்டு நடைபெற உள 20 ஓவர் உலக கோப்பை  தொடருக்கு சரியான அணியை தயார் செய்வதற்கான தொடக்கமாக இலங்கை உடனான தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.