தமிழகத்தில் பல கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகப்படுத்திய தமிழ்நாடு பிரீமியர் லீக் திருவிழா 8 வது சீசன் ஜூலை மாதம் 5 ஆம் தேதி சேலத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. சேலம், கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் சென்னை என 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடப்பு ஆண்டு ஒன்பது போட்டியில் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேலத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 ஆம் தேதி வரை லீக் போட்டிகள் சேலம் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்கி சென்னை கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. 



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் கிரிக்கெட் சங்க செயலாளர் பாபு குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டு தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரை 28 லீக் போட்டிகள் மற்றும் 4 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன.


சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விளையாட்டு மைதானத்தில் 9 லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


பரிசு தொகை:


தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் ரூ.50 லட்சம் தொடங்கி மற்ற இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.7 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ரவிச்சந்திரா அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பிரபல வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மகளிர் போட்டி ஓரிரு வருடங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.



டிக்கெட் முன்பதிவு:


மேலும் போட்டிக்கான டிக்கெட்டுகளை Paytm செயலி மூலமாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு சேலம் கிரிக்கெட் மைதானத்தில் 6,000 பார்வையாளர்கள் போட்டியை காண இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விலை 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 


சேலத்தில் ஐபிஎல் போட்டி:


ஐபிஎல் பொருத்தவரை சேலத்தில் நடத்துவதற்கு சாத்தியம் இப்போது இல்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்த கிரிக்கெட் மைதானம், மின்விளக்குகளை தவிர்த்து நட்சத்திர ஓட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கும் தனி அறைகள் இருக்க வேண்டும்.


இது மட்டுமின்றி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முன் வரும். எனவே சேலம் கிரிக்கெட் மைதானத்தில் தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் நடத்த சாத்தியம் இல்லை என்று தெரிவித்தனர்.