17 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணியில், சஹாலுக்கு இடமில்லாதது பல விவாதங்களுக்கு வழி வகுத்த நிலையில், X சமூக வலைத்தளத்தில் சஹால் பாசிடிவாக பதிவிட்டிருந்தார். ஆனால் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா Instagram இல் சீரியசாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.


சஹால் புறக்கணிப்பு


கடந்த திங்களன்று டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா முன்னிலையில் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், ஆசியக்கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தார். அதில் யுஸ்வேந்திர சஹாலுக்கு இடம் இல்லை. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் சாஹல் ஆகிய ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்தியாவுக்காக 15 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சு காம்போவாக இருந்து வந்துள்ளனர். மற்ற நால்வரும் ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்த நிலையில், சஹால் மட்டும் அதில் இல்லை. இதுகுறித்து பெரும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. 






சஹால் வெளியிட்ட பாசிட்டிவ் பதிவு


ஆல்-ரவுண்டர் ஹர்திக் உட்பட ஆறு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்ந்தெடுத்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களில் தேர்வாளர்கள் அந்த பாத்திரத்திற்காக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை இணைத்தனர். இதனால் சஹாலுக்கு இடமில்லாமல் போனது. இதுகுறித்து டிவிட்டரில், இரண்டு எமோஜிக்களை பயன்படுத்தி பாசிட்டிவ் அணுகுமுறையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் சூரியன் மீண்டும் உதயமாகும் என்ற பொருள்பட வெளியிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் டீகோட் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்: Tilak Varma: ஆசியக்கோப்பை அணியில் திலக் வர்மா… ஏன் இவ்வளவு விமர்சனம்? மூன்று முக்கிய காரணங்கள் இதுதான்!


சஹால் மனைவி வெளியிட்ட பதிவு


ஆனால் சஹால் போல அவரது மனைவி அதனை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது மனைவி தனஸ்ரீ ஸ்டோரியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில் சஹால் ஒதுக்கபட்டதற்கு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், "சீரியசாக கேட்கிறேன், மிகவும் கீழ்ப்படிந்து, இன்ட்ரோவெர்ட்டாக இருத்தல் உங்கள் துறையில் உங்கள் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்குமா? அல்லது வாழ்க்கையில் வளர நாம் அனைவரும் ஒரு எக்ஸ்ட்ரோவெர்ட்டாக இருக்க வேண்டுமா?" என்று எழுதியுள்ளார். இது மறைமுகமாக சஹால் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்வி என்று பலர் கமென்ட்-இல் கூறி வருகின்றனர்.



சஹாலின் புறக்கணிப்பு குறித்து அஜித் அகர்கர்


2021 முதல் 18 போட்டிகளில், சஹால் 26.62 சராசரியில் 29 விக்கெட்டுகளை எடுத்தார், மூன்று முறை நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். சுவாரசியமான எண்ணிக்கைகள் இருந்தபோதிலும், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா மற்றும் அக்சருக்குப் பிறகு ஒரே ஒரு முதன்மை சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே அணியில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததாக அகர்கர் விளக்கினார். ஆனால் பேட்டிங்கை ஒரு முக்கிய காரணியாக பார்க்க வேண்டி இருந்ததாக குறிப்பிடுகிறார். "அக்சர் படேல் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். குல்தீப் சில போட்டிகளில் சிறிய கேமியோக்கள் ஆடி இருக்கிறார். அந்த விஷயத்தில் சஹாலை விட முன்னணியில் உள்ளார்," என்று அகர்கர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.