இந்திய கால்பந்து சங்கத்தின் வெளிநபர்களின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா இந்திய சங்கத்தை தடை செய்திருந்தது. அதன்பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஃபிஃபாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விதிமுறைகளை பின்பற்றும் வகையில் விரைவில் புதிய தேர்தல் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சங்க தலைவர் தேர்தலுக்கு முன்னாள் வீரர்களான கல்யான் சௌபே மற்றும் பைஜங் பூட்டியா ஆகியோர் போட்டியிட்டனர்.


இந்நிலையில் இந்தத் தேர்தல் முடிந்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் கல்யான் சௌபே தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கேப்டன் பைஜங் பூட்டியாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். 33 மாநில சங்கங்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் கல்யான் சௌபே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவராகும் முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை கல்யான் சௌபே பெற்றுள்ளார்.


 






கல்யான் சௌபே முன்னாள் இந்திய அணியின் கோல் கீப்பராக இருந்தார். அதன்பின்னர் அவர் அரசியலில் களமிறங்கினார். மேற்குவங்க பாஜக கட்சியில் தலைவராக கல்யான் சௌபே இருந்து வருகிறார். 


முன்னதாக இந்தியா கால்பந்து சங்கத்தின் தடையை நீக்கி ஃபிஃபா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “ அகில இந்திய கால்பந்து நிர்வாகக் குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை தற்போது நிறுத்தப்பட்டது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகம் தினசரி விவகாரங்களில் இருந்த சிக்கல்களை நீக்கி, முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளது என்பதை ஃபிபா உறுதிப்படுத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



 ஃபிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கும். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல்களை சரியான நேரத்தில் ஒழுங்கமைக்க ஆதரவளிக்கும். இதன் காரணமாக, 2022 அக்டோபர் 11-30 தேதிகளில் நடைபெறவிருந்த FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை 2022 திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


 






17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல், இந்திய ஆடவர் அணி ஏ.எஃப்.சி ஆசிய கோப்பை 2023ஆம் ஆண்டு தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடை தற்போது நீக்கப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.