பிசிசிஐ முதன் முதலாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை களமிறக்க உள்ளது. அதில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் விளையாடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.   


ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 


இந்திய அணி முக்கிய வீரர்கள் அந்த சமயதில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதால், ஆண்கள் அணி மட்டும் பி அணியாக இருக்கும் என்ற நிபந்தனையுடன் பிசிசிஐ இந்த ஒப்புதலுக்கு வந்துள்ளது. இதனால், விராட் கோலி, ரோகித் ஷர்மா உட்பட உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் முக்கிய வீரர்கள் யாரும் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பெண்கள் அணியை பொருத்தவரை முன்னணி அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.



ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - உலகக்கோப்பை


ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது, அதே நேரத்தில் ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை நடைபெறுகிறது. பிசிசிஐ ஜூன் 30 க்கு முன் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு வீரர்களின் பட்டியலை அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 2010 மற்றும் 2014 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோதே அதில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இந்தியா அதற்கு அணியை களமிறக்கவில்லை. 


தொடர்புடைய செய்திகள்: Modi Biden Meeting: ”எதிர்காலம் நாம தான்” - பிரதமர் மோடிக்கு பைடன் தந்த சூப்பர் பரிசு..குஜராத்தில் களமிறங்கும் கூகுள் நிறுவனம்


ஏன் இத்தனை ஆண்டுகள் இந்தியா ஆடவில்லை?


ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இதனால் ஹாங்சோவில் கடந்தாண்டு நடைபெற இருந்த நிலையில், சீனாவின் கோவிட் கொள்கைகள் தொடர்பான காரணங்களால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அணிகளை அனுப்பும் முடிவில் உள்ளது. அதிலும் வாரியம் மகளிர் அணியையும் அனுப்புமா? என்பதில் தெளிவு இல்லை.



இரண்டு அணிகளை ஒரே நேரத்தில் அனுப்பும் திட்டம்


பிசிசிஐ இரண்டு தேசிய அணிகளை இதுபோன்ற போட்டிகளில் களமிறக்குவது இது முதல் முறை அல்ல. 1998 இல், கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு அணியை அனுப்பி இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கொண்ட அணி, பாகிஸ்தானை சஹாரா கோப்பையில் எதிர்கொண்டது. இதே போல இரண்டு அணிகளை பிசிசிஐ அனுப்பிய சம்பவம் சமீபத்தில் கூட நடந்தது. 2021 இல், ஷிகர் தவான் இலங்கையில் ஒரு தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தினார், அதே நேரத்தில் விராட் கோலி தலைமையிலான மற்றொரு அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் முன்னதாகவே சென்று இங்கிலாந்தில் இருந்தது குறப்பிடத்தக்கது.