T20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 குரூப் ஏ பிரிவிலிருந்து நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை பந்தயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை இங்கிலாந்து-இலங்கை இடையிலான இன்றைய போட்டி தீர்மானிக்கும். இலங்கையை வீழ்த்தினால் இங்கிலாந்து அரையிறுதிக்கும், இங்கிலாந்து தோற்றால் ஆஸ்திரேலியா முன்னேறும்.


டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு மோதுகின்றன.


இதுவரை இரு அணிகளுக்கு 13 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இங்கிலாந்து 9 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து நான்கு முறை இலங்கையை வீழ்த்தி ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது.


இரு அணிகளும் கடைசியாக டி20 உலகக் கோப்பையில் 2021ல் ஷார்ஜாவில் சந்தித்தபோது, ​​இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 


கணிக்கப்பட்ட இலங்கை அணி:


1. குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), 2. பதும் நிஸ்ஸங்க, 3. தனஞ்சய டி சில்வா, 4. சரித் அசலங்கா, 5. பானுக ராஜபக்ச, 6. தசுன் ஷனக (கேப்டன்), 7. வனிந்து ஹசரங்க, 8. பிரமோத் மதுஷன், 9. மஹீஷ் தீக்ஷனா, 10. கசுன் ராஜித, 11. லஹிரு குமார


கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:


 1. ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட்), 2. அலெக்ஸ் ஹேல்ஸ், 3. டேவிட் மலான், 4. பென் ஸ்டோக்ஸ், 5. லியாம் லிவிங்ஸ்டோன், 6. ஹாரி புரூக், 7. மொயின் அலி, 8. சாம் குர்ரன், 9. கிறிஸ் வோக்ஸ், 10. மார்க் வூட், 11. அடில் ரஷித்


அரையிறுதிக்கு செல்லுமா இங்கிலாந்து..? 


நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியால் இங்கிலாந்து அணியின் நிகர ரன் ரேட்க்கு மேல் செல்ல முடியவில்லை. 


தற்போதுவரை, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 7 புள்ளிகளுடன் -0.173 ரன் ரேட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 7 புள்ளிகளுடன் +2.113 ரன் ரேட் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 


இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் மழையினால் 1 சிறப்பு புள்ளியை பெற்றுள்ளது. இதன் மூலம், 5 புள்ளிகளுடன் +0.547 மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாம் இடத்திற்கு சென்று அரையிறுதிக்கு தகுதி பெறும். மேலும், இங்கிலாந்து இன்றைய போட்டியில் 127 ரன்கள் மட்டும் அதற்குமேல் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து ரன் ரேட்டை விட அதிகமாக பெற்று முதலிடம் பிடிக்கும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கும். ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் இருந்தாலும் இங்கிலாந்து அணியை விட குறைந்த ரன் ரேட் கொண்டு இருப்பதால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும்.