இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. 


ஆஸ்திரேலியா முதலிடம்: 


ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தற்போது இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் போட்டிகளில் சம புள்ளிகளை பெற்றிருந்தாலும், இன்னும் இந்திய அணி முதலிடம் பிடிக்க வெற்றி தேவை என்று கூறப்படுகிறது. சமீப காலமாக இந்திய அணி தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு வலுப்பெற்று வருகிறது. 


ஜனவரி முதல் தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யவில்லை:


அணிகளின் தரவரிசை 28 ஜனவரி 2024க்கு பிறகு ஐசிசி அப்டேட் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவின் ரேட்டிங் 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ரேட்டிங் 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், ஜனவரி 28 முதல் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய ஐசிசியின் அப்டேட்கள் இல்லாததால், இப்போது இந்தியாவின் ரேட்டிங் என்னவென்று தெரியவில்லை. 


அடுத்தடுத்த இடங்களில் யார் யார்..? 


தற்போதைய புள்ளி விவரங்களின்படி, இங்கிலாந்து அணி 115 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே அந்த அணியின் ரேட்டிங் புள்ளிகள் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் இது இங்கிலாந்து அணியின் தரவரிசையையும் பாதிக்குமா என்பதைப் பார்ப்பதான் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை விட கீழே விழுமா அல்லது தனது தரவரிசையை காப்பாற்றி கொள்ளுமா என்று தெரியவில்லை. சமீபத்தில், தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஐசிசி தரவரிசையை மேம்படுத்தும் போதுதான் இது தெரியவரும். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இது புதுப்பிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.


இந்தியா நம்பர் 1: 


சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஐசிசி அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்டிலும் முதலிடம் பிடித்தால், ரோஹித் தலைமையிலான இந்திய படை மூன்று வடிவங்களிலும் நம்பர் ஒன் அணியாக மாறும். இந்திய அணி ஒருநாள் போட்டியில் 121 புள்ளிகள் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 118 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி மற்ற அணிகளை விட அதிக புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் புதுப்பிப்புக்காக அனைத்து அணிகளும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.