Sourav Ganguly: 'எல்லோரும் தோனி ஆகிட முடியாது' - இளம் வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சவுரவ் கங்குலி

Sourav Ganguly: கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் தோனி ஆகிவிட முடியாது என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

Sourav Ganguly: இளம் கிரிக்கெட் வீரர் துருவ் ஜுரெலுக்கு ஆதரவாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

Continues below advertisement

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. குறிப்பாக நடப்பு தொடரில் மூத்த வீரர்களான கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஷமி போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கவில்லை. இளம் வீரர்கள் குறிப்பாக முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

நம்பிக்கை தரும் இளம் வீரர்கள்:

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து தரப்பிலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. சர்ஃப்ராஷ் கான், ஆகாஷ் தீப், சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளனர். அதேநேரம், ராஞ்சியில் நடைபெற்ற கடைசி போட்டியில், இந்திய அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைநோக்கி களமிறங்கியபோது, அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தது. அப்போது, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரெல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதேபோட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 90 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

பாராட்டும் மூத்த வீரர்கள்: 

இக்கட்டான சூழலில் நிதானமாகவும், பொறுப்புடன் செயல்பட்ட ஜுரெலை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, ராஞ்சி போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.  ரிஷப் பண்ட் வந்தாலும் தோனி தன்னுடைய கெரியரில் எட்டிய அதே உயரத்தை துருவ் ஜூரெலும் எட்டுவார் என அனில் கும்ப்ளே பாராட்டினார்.

”எல்லோரும் தோனி ஆக முடியாது”

இந்நிலையில் ஜுரெல் தொடர்பாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி,தோனி முற்றிலும் வித்தியாசமானவர். துருவ் ஜூரெல் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோனி தோனியாக உருவெடுப்பதற்கு 20 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே துருவ் ஜூரெலை விளையாட விடுங்கள். சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. குறிப்பாக அழுத்தமான சூழலில் அவரைப் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். அவரிடம் நல்ல பொறுமை இருக்கிறது. அதேபோல சிறப்பான திறமையை கொண்ட ஜெய்ஸ்வால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடியவர். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சமமாக விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் மகத்தான கெரியரை பெற நான் விரும்புகிறேன்” என கங்குலி பேசியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola