இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தான் தந்தையானதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


”தந்தை”யானார் பும்ரா:


இதுதொடர்பாக பும்ரா வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது & எங்கள் இதயங்கள் நாங்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் சந்திரனுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அன்புடன் கொண்டுவரவுள்ள  அனைத்திற்காகவும் எங்களால் காத்திருக்க முடியவில்லை - ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா” என குறிப்பிட்டுள்ளார். இதையடுது, பும்ராவின் குடும்பத்திற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.






பும்ரா திருமண வாழ்க்கை:


தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய சஞ்சனா கணேசன் என்பவரை, காதலித்து கடந்த 2021ம் ஆண்டு பும்ரா திருமணம் செய்து கொண்டார். சக வீரர்களை போன்று சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத பும்ரா, தனது தனிப்பட்ட விவகாரங்களை ரகசியமாகவே வைத்துள்ளார். இதனால் தான், அவரது மனைவி கருவுற்று இருந்ததும் கூட பலருக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான், பும்ரா தான் தந்தையாகி இருப்பதை சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க: IND vs NEP: வரட்டா மாமே, போன வேகத்திலேயே மும்பை திரும்பிய பும்ரா..! ஆசியக்கோப்பையும் போச்சா, என்ன பிரச்னை?


மும்பை திரும்பிய பும்ரா:


காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா அண்மையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டனாக செயல்பட்டு, இளம் வீரர்களை கொண்டு தொடரை கைப்பற்றினார்.  தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில்  தொடங்கி நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்துள்ளார். இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.


இந்நிலையில், தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற நேபாள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்த சூழலில், மகனை காண இலங்கையில் இருந்து பும்ரா மும்பைக்கு திரும்பியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால், பும்ரா மீண்டும் இலங்கை சென்று அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.