நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஏ பிரிவின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நாள் தொடர்:
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒரு நாள் தொடரானது சென்னையில் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியானது வரும் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடிபெறவுள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியை சஞ்சு சாம்சன் வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரன் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கேப்டனாக சஞ்சு சாம்சன்:
டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இந்த முடிவு சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது பலரதும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சனை உலக கோப்பை போட்டியில் எடுக்காததால், விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்க்குதான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்