இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முக்கிய தொடரான விஜய் ஹசாரே தொடர் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும் கர்நாடகா அணியும் காலிறுதிப்போட்டியில் மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டியில் சர்ப்ரைஸாக தமிழக அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் பேட்டிங்கிலும் அசத்தலாக அரைசதம் அடித்திருக்கிறார்.


உள்ளூர் போட்டிகளை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு Vs கர்நாடகா இந்த ரைவல்ரி எப்போதுமே சுவாரஸ்யமாக அமையும். சமீபத்தில் கூட சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளுமே மோதியிருந்தன. அதில், தமிழக அணியை கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஷாரூக்கான் சாம்பியன் ஆக்கியிருப்பார். இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இன்று இந்த இரண்டு அணிகளும் மீண்டும் காலிறுதிப்போட்டியில் மோதி வருகின்றன.



கர்நாடகா அணியின் கேப்டனான மனீஷ் பாண்டேவே டாஸை வென்று முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார். தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. பாபா அபராஜித்தும் ஜெகதீசனும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். பாபா அபராஜித் நீண்ட நேரம் நிற்கவில்லை. விஜயகுமார் வீசிய 6 வது ஓவரிலேயே 13 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில்தான், நம்பர் 3 இல் சர்ப்ரைஸாக சாய் கிஷோர் களமிறங்கினார். சாய் கிஷோர் ஒரு இடது கை ஸ்பின்னர். தமிழக அணியில் முக்கிய பௌலராக ஆடி வருகிறார். பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்கியே ஆடக்கூடியவர். ஆனால், இந்த போட்டியில் விஜய் சங்கர் அவரை நம்பர் 3 இல் அனுப்பிவிட்டார். ஜெகதீசனுடன் கூட்டணி போட்ட சாய் கிஷோர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். ஜெகதீசனுடன் 147 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். 71 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 61 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். 61 ரன்களில் கரியப்பாவின் பந்துவீச்சில் அவுட் ஆகியிருந்தார்.






சாய் கிஷோரின் அரைசதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பந்துவீச்சில் பவர்ப்ளே, மிடில், டெத் என எல்லா இடத்திலுமே கட்டுக்கோப்பாக வீசி தன்னை நிரூபித்திருந்த சாய் கிஷோர் இப்போது தனக்கு பேட்டிங்கும் ஆட தெரியும் என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய கிரிக்கெட் சூழலில் ஒரே ரோலை மட்டுமே ஒரு வீரர் செய்து கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் அந்த்ந் வீரருக்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஒரு பௌலர் கொஞ்சம் பேட்டிங் ஆடும் திறனுடனும் ஒரு பேட்ஸ்மேன் கொஞ்சம் பந்துவீசும் திறனுடனும் இருப்பதையே அத்தனை அணிகளும் எதிர்பார்க்கின்றன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலேயே சாய் கிஷோர் திடீரென பேட்ஸ்மேனாக விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடும்.


மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த நான்கு சீசன்களாக சாய் கிஷோர் சென்னை அணியிலேயே இருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் ஆடியிருக்கவில்லை. இந்நிலையில், வெகு சீக்கிரமே அடுத்தடுத்த சீசன்களுக்கான மெகா ஏலம் நடைபெறப்போகிறது. அந்த ஏலத்தில் தனக்கான டிமாண்டை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்தே கூட கூடுதல் பொறுப்போடும் தீர்க்கத்தோடும் சாய் கிஷோர் சிறப்பாக ஆடியிருக்கக்கூடும்.